1. கால்நடை

முதலீடு செய்த இரண்டு மாதங்களுக்குள் வருமானம் தரும் பண்ணைத் தொழில்

KJ Staff
KJ Staff
Brown Quail

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்  ஜப்பானிய காடைகள் வளர்ப்பு லாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. காடைகள் மிகக்குறுகிய காலத்திலேயே, அதாவது ஐந்து அல்லது ஆறு வார இறுதியில் விற்பனைக்கு தயாராகி விடும் என்பதால்  முதலீடு செய்த இரண்டு மாதங்களுக்குள் வருமானத்தை பார்த்து விடலாம். இந்த வகை காடைகள் வீடுகளிலும், பண்ணைகளிலும் வைத்து வளர்க்க ஏற்றவை. காடை மிகச்சிறிய அளவில் இருப்பதால் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.

இறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்

மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம். கோழிவளர்ப்பினைப் போன்று, அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானிய காடைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் காடைகள் நன்கு வளர்கின்றன. கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகி விடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக் காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட் கொள்வதால் தீவனச் செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகின்றது.

ஜப்பானியக் காடை இறைச்சி

காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாய் கருதப்படுகின்றது.

காடை இனங்கள்

  1. நியூசிலாந்து காடை
  2. பாப் வெள்ளைக் காடை
  3. சைனாக் காடை
  4. மடகாஸ்கர் காடை
  5. கலிபோர்னியா காடை
  6. நியூகினியா காடை
  7. ஜப்பானிய காடை

 ஜப்பானியக் காடை வளர்ப்பு முறை

காடை இனங்களில் ஜப்பானியக் காடை மட்டுமே நம் நாட்டில் இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கலாம். காடைகளைத் தரையில் அதாவது ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம்.

Quail food management

காடைத்தீவனம்

காடைகளுக்கும் கோழித் தீனியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. காடைக்குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26-28 சதவிகிதம் புரதமும், 2700 கி கலோரி / கிலோ எரிசக்தியும் கொண்டதாக இருக்கவேண்டும். இவ்வகைத் தீவனத்தை 0-6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீவனங்களை மாற்றி பயன்படுத்த திட்டமிடும் பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதம் புரதமும் 2800 கிலோ கிலோரி / கிலோ எரிசக்தி உள்ள தீவனத்தையும் உபயோகிக்லாம். காடைகளுக்கென சில நிறுவனங்கள் தீவனம் தயாரித்து விற்கின்றன. காடைத்தீவனம் கடையில் வாங்க இயலாத போது காடை வளர்ப்போர் இறைச்சிக் கோழிக்கான ஆரம்பகால தீவனத்தை (Broiler Starter Mash) வாங்கி 75 கிலோ தீவனத்துடன் 5 கிலோ வீதம் பிண்ணாக்கு தூளை கலந்து கொடுக்கலாம். இத்தீவனத்தில் தானியங்கள் அளவு பெரிதாக இருப்பின் மீண்டும் ஒரு முறை அரைத்து தூளின் அளவைக் குறைத்து உபயோகிக்கலாம்.

ஐந்து வார வயது வரை ஒரு காடை 500 கிராம் வரை தீவனத்தை உட்கொள்ளும் சராசரியாக ஆண்காடை 180-190 கிராமும் பெண் காடை 190-210 கிராம் உடல் எடையும் அடைந்திருக்கும். இதுவே விற்பனைக்கு தயாரான நிலை. பெண்காடை ஆண்காடையை விட எடை அதிகமாக இருக்கும். கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப் பகுதியில் வெளிர் பழுப்பு நிற இறகுகளில் கறுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். ஆண்காடைகளின் கழுத்து மற்றும் அதன் கீழ் உள்ள மார்புப்பகுதி இறகுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

இனப்பெருக்கம்

காடைகள் 7 வார வயதில்  முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.

Quail Eggs

குஞ்சு பராமரிப்பு

காடைக்குஞ்சுகள் பொரித்தவுடன் அளவில் மிகச் சிறியவையாக 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ளதாகத்தான் இருக்கும். இதனால் கோழிக் குஞ்சுகளுக்குப் புரூடர் வெப்பம் அதிகம் தேவைப்படும். போதுமான வெப்பம் மின்விளக்கின் மூலம் கிடைக்காவிட்டால் அவை கூட்டமாக ஒன்றன் மீது ஒன்று ஏறி நெருக்கி மூச்சுத் திணறி இறப்பு ஏற்படும். வேகமான குளிர் காற்று வீசும் போதும் சன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், பக்கவாட்டில் தொங்க விடப்பட்டுள்ள மறைப்பு விலகி விட்டாலும், மின்சாரத் தடையேற்படும் போதும் இவ்வாறு நேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை நோய்கள்

காடைக்குஞ்சுகளில் கால் வலுவிழந்த குஞ்சுகளும், நோஞ்சான் குஞ்சுகளும் அதிகம் இருக்கக்கூடும். குஞ்சு பொரிப்பகங்களில் முட்டையிடும் காடைகளுக்குப் போதுமான அளவில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அளிக்கப்படாததால் இவ்வாறு நேரலாம்.

Quail Chicks

நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்

  • தொப்புள் அழற்சி
  • ஈகோலி நோய்
  • காடைக்கழிச்சல் மற்றும் காளான் நோய்கள்
  • நுரையீரல் அழற்சி
  • பூசண நச்சு

மேலும் மேரெக்ஸ் வாத நோய், இராணிக்கெட் கழிச்சல் நோய் போன்ற வைரஸ் நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களும், காக்சிடியோசிஸ் எனப்படும் இரத்தக் கழிச்சல் நோயும் காடைகளைப் பாதிக்கலாம். இருப்பினும் கோழிகளை விடக் காடைகள் இந்நோய்களை எதிர்க்கும் சக்தி அதிகம் கொண்டவையாக இருப்பதனால், இவ்வகை நோய்களுக்கு எதிராகத்தடுப்பு முறைகள் ஏதும் எடுக்கவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.

எனவே குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம், குளிர் காற்று வீசாமல் இளம் பருவத்தில் பாதுகாப்பு, முறையான கிருமி நீக்கம் எப்பொழுதும் தூய்மையான குடிநீர், தரமான கலப்புத் தீவனம் அளித்தல் போன்றவற்றைக வகையாகக்  கையாண்டால் காடைகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தைப் பெருமளவு குறைத்து நோயின்றி அவைகளைப் பாதுகாக்கலாம்.

ஜப்பானிய காடைகள் தவிர நியூசிலாந்து காடை, மடகாஸ்கர் காடை, கலிபோர்னியா காடை, சைனாக்காடை போன்ற ரகங்களும் உள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில் நந்தனம் - 1, நந்தனம் - 2, நந்தனம் - 3, நாமக்கல் காடை - 1, நாமக்கல் தங்கக்காடை ஆகிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Looking for Business ideas? Complete Guideline of small scale profitable Japanese Quail farming Published on: 22 October 2018, 02:44 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.