1. வாழ்வும் நலமும்

இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனை குறைப்பதற்கான வழிமுறைகள்

KJ Staff
KJ Staff

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது. எனவே இரத்தம் என்பது நம் உடலில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து செல்கிறது. இதனையே நாம் இரத்த ஓட்டம் என்று குறிப்பிடுகிறோம். ஆகையால் இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் (Blood Pressure) எனப்படுகிறது.

நம் இதயம் சுருங்கும் போதும், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தும் போதும் தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகமாகவும் இதயம் விரிந்து இரத்தம் இதயத்தில் நிரம்பும்போது தமனிகளில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் குறைவாகவும் காணப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும். சில நேரங்களில் உங்களால் இதை உணர முடியும். ஆனால் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் இதயத்தின் செயல்படும் தன்மை குறைக்கப்படுகிறாது. இச்செயல் “இதய செயலிழப்பு” (Heart Failure) ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வாதம் (பக்க‌ வாதம்) ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் எப்பொழுதும் விளக்கப் படுவதில்லை. ஆனால் பின்வருபவை ஒருவித காரணியாகச் செயல்படுகிறது.

 • குறைவான உடல் உழைப்பு
 • உடல் எடை அதிகரிப்பு (Over weight or Obese)
 • உணவில் சேர்க்கப்படும் அதிக அளவு உப்பு
 • குடிப்பழக்கம்
 • உயர் இரத்த அழுத்தத்திற்கான குடும்பப் பின்னணி

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லை எனினும் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதால் பிற்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் வருவதை முற்றிலுமாகத் தடுக்கலாம்.

ஆய்வுகளில் 95 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பின்வரும் காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அவை…

 1. புகைப் பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
 2. ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம்.
 3. இரத்தம் குறைந்த அளவில் சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்லப்படுதல்
 4. சிறுநீரகக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டவர்கள்
 5. அதிகக் கொழுப்பு தமனிகளில் படிவதனால் இருதய தமனிகள் சுருங்குதல்
 6. கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல் போன்றவையாகும்.

கவலை, பதற்றம், சோர்வு, பயம், மன அழுத்தம் போன்றவைகளால் கூட இரத்த அழுத்தத்தின் அளவு கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் உணவில் சேர்க்கப்படும் அளவிற்கு அதிகமான உப்பு இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இரத்தமானது உடலில் உள்ள நீரினை எடுத்துக் கொண்டு சிறுநீரின் மூலமாக இரத்தத்தில் கலந்துள்ள உப்பினை வெளியேற்ற முனைகிறது. இவ்வாறான செயல்பாடுகளினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தின் அளவு:

அனைத்து இரத்த அழுத்த அளவு இரண்டு எண்களைக் கொண்டுள்ளது. இரத்த அழுத்தம் mmHg என்று குறிப்பிடப்படுகிறது. mmHg என்பது பாதரசத்தில் மில்லிமீட்டர் ஆகும். உங்களது இரத்த அழுத்தம் அளவு 120/80 mmHg என்றால் உங்கள் மருத்துவர் அல்லது செவிலியரோ 80க்கு மேல் 120 என்று கூறுவார்கள். முதல் எண் என்பது உங்களுடைய இதயம் சுருங்கும்போது உங்கள் இரத்த நாளங்களில் ஏற்படும் அதிகபட்ச இரத்த அழுத்தத்தைக் குறிக்கும். இதனை ‘சிஸ்டோலிக்’ இரத்த அழுத்தம் (Systolic Blood Pressure ) என்றும் குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக 130 mmHg.

இரண்டாவது எண் என்பது உங்களின் இதயம் விரிவடையும்போது இரத்த நாளங்களில் இருக்கும் குறைந்த பட்ச இரத்த அழுத்தம் ஆகும். இதனை ‘டயஸ்டோலிக் இரத்த அழுத்தம்’ (Diastolic Blood Pressure) என்பார்கள். எடுத்துக்காட்டாக 75 mmHg.

உங்களது சராசரி இரத்த அழுத்தம் 120/80 ‍‍mmHg ஆக அல்லது 140/90 mmHg க்குக் குறைவாகவே இருக்க வேண்டும். இதயம் அல்லது இரத்த சுற்றோட்ட நோய்கள் ஏதேனும் இருப்பின் குறிப்பாகக் கரோனரி இதய நோய்கள் (Coronary Heart Disease), ஆன்ஜைனா, மாரடைப்பு, வாதம் மற்றும் நீரிழிவு அல்லது சிறுநீரகம் சார்ந்த நோய்கள் இருப்பின் உங்களுடைய இரத்த அழுத்த அளவு கட்டாயமாக 130/80 mmHg ஆக இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்க வாழ்க்கை முறையில் (Life Style) சில மாறுதல்களைக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும்.

1) ஆரோக்கியமான உடல் எடை பராமரித்தல்:

உடல் எடையைப் பராமரிப்பது இரத்த அழுத்தத்தினை சீராக வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தினைக் குறைக்க விரும்புவர்கள் முதலில் தங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும். இரத்தக் கொதிப்பும் உடல் பருமனும் ஒன்று சேர்ந்தால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தீங்கு விளைவிக்கிறது. உடல் பருமன் இரத்த சுழற்சியினை (Blood Circulation) பாதிக்கும். மேலும் இவை எலும்புகளில் அழுத்தத்தினையும் உருவாக்குகிறது. உடல் எடை குறைப்பது மிகவும் பயனுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது.

மருத்துவரைக் கலந்து ஆலோசித்துப் பாதுகாப்பான முறையில் உடல் எடையினைக் குறைக்கலாம்.

உடல் நிறைக் குறியீட்டு எண்: (Body Mass Index – BMI)

உங்கள் எடையைக் குறைப்பது தேவையான ஒன்று என்பதில் நீங்கள் உறுதியற்று இருந்தால் மருத்துவரிடம் உங்கள் உடலின் “உடல் நிறைக் குறியீட்டு எண்ணை” (Body Mass Index – BMI) கணக்கிடச் சொல்லுங்கள். உங்களின் எடையின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது என்றால் மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

உடல் நிறைக் குறியீட்டு எண் என்பது உங்கள் உயரத்தில் எடை விகிதம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண் தெரிந்திருப்பது அவசியம்.

2) உடற்பயிற்சி:

உங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண்ணை அதிகரிப்பதற்கும் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைப்பதற்கும் சிறந்த வழி உடற்பயிற்சி ஆகும். அதுவும் வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும்.

நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் (Aerobic Exercise) உடற்பயிற்சிகளான நடை பயிற்சி மற்றும் வீட்டைச் சுற்றி செய்யும் வேலைகள் அனைத்தும் உங்களின் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவும். நீங்கள் இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர் என்றால் எளிய உடற்பயிற்சியினை செய்ய முயற்சி செய்யுங்கள். தியானம், யோகா (தவம்) போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கலாம்.

3) ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

சத்தான உணவு முறை ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தினைப் பெற மற்றுமொரு திறவு கோலாக விளங்குகிறது. உணவுகளில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைந்த மற்றும் சீரான சம அளவு ஊட்டச்சத்தினைக் கொண்டவற்றைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

4) சோடியம் உப்பைக் குறைத்தல்:

உப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஒன்றோடொன்று சேர்த்துக் குழம்பிக் கொள்ள வேண்டாம். ஆய்வுகளின் படி நீங்கள் தினமும் உபயோகிக்கும் உப்பில் சிறிதளவை நீக்கினால் கூட அது உங்களின் குறை இரத்த அழுத்தத்திற்கு அதாவது 8 mmHg அளவிற்குக் கொண்டு செல்லும். நீங்கள் நாள் ஒன்றுக்கு உணவில் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு 1500 (mg) மில்லிகிராமிற்கு மேல் செல்லக் கூடாது.

5) பொட்டாசியம் அளவை அதிகரித்தல்:

நீங்கள் அதிகளவில் உட்கொள்ளும் பொட்டாசியத்தினால் சோடியத்தால் ஏற்படும் விளைவுகளை ஈடு செய்ய முடியும். பொட்டாசியம் நிறைந்த உணவுகள், உயர் இரத்த அழுத்தத்திற்காகப் பின்பற்றப் படும் உணவு முறைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

நாளொன்றுக்கு நீங்கள் உட்கொள்ளும் பொட்டாசியத்தின் அளவு 4700 மில்லிகிராமிற்கு மேல் செல்லக் கூடாது.

6) மன அழுத்தத்தைக் குறைத்தல்:

மன அழுத்தம் உங்களின் இரத்த அழுத்த அளவினைத் தற்காலிகமாக உயர்த்துகிறது. உங்கள் மன அழுத்தத்தினைக் குறைப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். அதுவும் நீங்கள் உடல் பருமன் காரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு ஆளானவர் என்றால் மேற்கூறியது மிகவும் அவசியம்.

மன அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும் கோபம், வெறுப்பு, எரிச்சல் மற்றும் எப்பொழுதும் தீராத சிந்தனையில் இருத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 7) மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்:

மதுவின் அளவினை குறைத்தல் அல்லது முற்றிலும் தவிர்த்தல் போன்றவை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவுகிறது. சிவப்புத் திராட்சை ரசம் (Red Wine) கூடப் பொதுவாக அதன் ஆரோக்கியமானப் பலன்களுக்கு மாறாக உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிர்மறையான விளைவினை ஏற்படுத்துகிறது.

புகைப் பிடித்தல் உங்கள் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடித்தலை விடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். எனினும் பல வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றிப் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

உயர் இரத்த அழுத்தத் தற்காப்பு முறைகள்:

“வருமுன் காப்பதே சிறந்தது” எனவே உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கீழ்கானும் தடுப்பு முறைகளைப் பின்பற்றலாம்.

சோடியம் குறைவாக உள்ள உணவினை உண்ணுதல், இதயம் சார்ந்த உடற்பயிற்சியினை ஒரு மணி நேரம் விகிதம் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்து வர வேண்டும். உங்களின் பரம்பரையில் யாருக்கேனும் இதயம் சார்ந்த நோய் அல்லது இரத்தக் கொதிப்பு உள்ளதா எனக் கண்டறிய வேண்டும். அவ்வாறு யாருக்கேனும் இருந்தால் உங்களுக்கு இரத்தக் கொதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது உங்கள் மருத்துவருக்கும் மேற்கொண்டு உங்களைச் சிகிச்சை செய்யப் பயனுள்ள தகவலாக அமையும்.

English Summary: The Causes of Blood Pressure and the way to reduce it

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.