
வெறும் வாழைப்பழ விவசாயத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 30 லட்சம் வருமானம் பெற முடியுமா? கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதை உண்மையில் ஒரு நபர் செய்து காட்டியுள்ளார். அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் அமைந்துள்ள அமைதியான கிராமம் தான் மதன்காவ்ன். இந்தக் கிராமத்தில் வசிக்கும் தேபப்ரத் ரபா என்ற விவசாயி வெறும் வாழைப்பழ விவசாயத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 30 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார்.
ரபா ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே விவசாயம் தொடர்பான ஆழமான அறிவு இவருக்குள் இருந்து வந்துள்ளது. ரபாவின் மூத்த சகோதரர் டீச்சராக பணிபுரிகிறார். அவருடைய தம்பி அசாம் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். குழந்தையாக இருந்த போதும் வயல்களில் தனது தந்தைக்கு உதவுவதில் தான் கவனம் செலுத்தி வந்துள்ளார். தான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பு தந்தைக்கு வேலை செய்துவிட்டு விடுமுறை நாட்களிலும் காய்கறிகளை அறுவடை செய்வது போன்றவற்றையெல்லாம் செய்து வந்துள்ளார்.
ரபாவுடன் படித்த பிற நண்பர்கள் எல்லாம் அரசாங்க வேலைகளைத் தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளனர். ஆனால் ரபா ஏற்கனவே சிறுக சிறுகப் பணத்தை சேமிக்கத் தொடங்கியிருந்தார். 2009-ஆம் ஆண்டில் அந்த சேமிப்புகளை பயன்படுத்தி ரபா 2.5 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதில் முதலில் கரும்பு விவசாயம் செய்தார். ஆனால் 2011-ஆம் ஆண்டில் அவரும் அவரது இரண்டு உறவினர்களான ஹீரோ ரபா மற்றும் தீபங்கர் ரபா ஆகியோர் வாழை சாகுபடி செய்ய ஊக்குவித்துள்ளனர். இதனால் 2011 ஆம் ஆண்டில் அந்த 2.5 ஏக்கர் நிலத்தில் மூவரும் சேர்ந்து வாழைப்பழ விவசாயம் செய்ய தொடங்கினர்.
மால்போக், ஜஹாஜி, ஜி9 மற்றும் செனிச்சம்பா போன்ற வாழை வகைகளை பயிரிட்டனர். இந்த ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி தேவை இருந்து வருகிறது. ஆரம்பகட்டத்தில் பெரும்பாலான வணிகப் பண்ணைகளில் பொதுவாக பயன்படுத்தப்படுவது போல இரசாயன உரங்களை நம்பி விவசாயம் செய்தனர். காலப்போக்கில் ரபா மண் சோர்வு மற்றும் மண்ணரிப்புகளை தொடர்ந்து கவனிக்க தொடங்கினார்.
இதனால் ரபா பயோ உரங்களுக்கு மாறத் தொடங்கினார். அதோடு பன்றி வளர்ப்பு கழிவுகள், மாட்டு சாண உரம் போன்றவற்றையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தியுள்ளார். இது போன்ற உரங்களால் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுவதோடு வாழைப்பழங்களின் தரமும் அதன் ஆயுளும் அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் மற்ற பகுதிகளைப் போல வெள்ள பாதிப்பு பகுதியாக இல்லாமல் மேகாலயாவின் அடிவாரத்தில் கோல்பாரா கிராமம் இருப்பதால் இங்கு நீர் தேங்குவது அவ்வளவாக இருக்காது. ஆனால் அவ்வப்போது பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். அப்படி எப்போதெல்லாம் காற்று வீசுகிறதோ? அப்போதெல்லாம் வாழை செடிகள் 60 முதல் 70% அழிந்து விடும். அதோடு பழங்கள் உதிர்தல் மற்றும் மகசூல் இழப்பு போன்றவையும் ஏற்படலாம். இதை எதிர்ப்பதற்கு நடவு முறைகளிலும் சில யுத்திகளைக் கையாண்டுள்ளனர். போதிய இடைவெளி விட்டு வாழை செடிகளை நட்டுள்ளனர். ஆரம்பத்தில் தரமான செடிகளைப் பெறுவது அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துள்ளது. குறிப்பாக ஜி9 வகை செடிகளை பெங்களூரு போன்ற தொலைதூர நகரங்களில் இருந்து பெற வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அசாமின் சந்தையிலேயே நிறைய ஜி9 கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இப்படி பல கஷ்டங்களை சமாளித்து அவர்கள் விளைவிக்கும் வாழைப்பழங்கள் தற்போது அசாம் மாநிலம் மட்டுமல்லாமல் மேற்கு வங்காளம், பீகார் போன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
Share your comments