ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு மானியத்தில் கோழிக்குஞ்சு, புல் நறுக்கும் கருவிகளுக்கு மானியம், பசுந்தீவனப் பயிர் உற்பத்தி செய்வதற்கு அரசின் சார்பில் உதவி என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதற்கு கால்நடை விவசாயிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு பின் மீண்டும் சட்டமன்ற பேரவை கூடிய நிலையில், கால்நடை பராமரிப்பு துறையின் மானியக் கோரிக்கையில் புதிதாக 11 அறிவிப்புகளை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு-
1.ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு மானியத்தில் கோழிக் குஞ்சுகள்
புழக்கடை கோழி வளர்ப்பானது ஏழ்மை மக்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதோடு பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், அவர்களது வருமானத்தை பெருக்கிடவும் வழிவகை செய்வதால், தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள, குறிப்பாக கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38,700 பெண் பயனாளிகளுக்கு (ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம், சென்னை நீங்கலாக) தலா 40 நாட்டின கோழிக் குஞ்சுகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூபாய் 6 கோடியே 45 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
2.தஞ்சாவூர் நடுவூர் மாவட்ட கால்நடைப் பண்ணை:
அதிக பரப்பளவில் பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்து தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்கும். உயர் மரபுத் திறன் கொண்ட கால்நடைகளை இனப் பெருக்கத்திற்காக வளர்க்கும் பொருட்டும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நடுவூர் மாவட்ட கால்நடைப் பண்ணை மேம்படுத்தப்படும்.
3.புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணை:
புதுக்கோட்டை மாவட்ட கால்நடைப் பண்ணையில் உயர் மரபுத்திறன் கொண்ட கால்நடைகளை இனப் பெருக்கத்திற்காக வளர்ப்பதற்கும், பசுந்தீவனப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கும் ரூபாய் 5 கோடி செலவில் உள்ளீடு வசதிகள் வழங்கப்பட்டு இப்பண்ணை மேம்படுத்தப்படும்.
4. 100 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவனப் பயிர்கள்:
செட்டிநாடு, மாவட்ட கால்நடைப் பண்ணையில் பசுந்தீவன உற்பத்தியை மேலும் அதிகரிக்க பயிரிடப்படாத 100 ஏக்கர் நிலப்பரப்பில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனப் பயிர்கள் ஐந்து கோடி ரூபாய் செலவில் பயிரிடப்பட்டு தீவன உற்பத்தி பெருக்கப்படும்
5. புல் நறுக்கும் கருவிகளுக்கு 50 விழுக்காடு மானியம்:
விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் உலர் மற்றும் பசுந்தீவனங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி அவற்றின் தரம் மாறாமல் கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதற்கு, மின்சாரத்தால் இயக்கப்படும் 3000 புல்நறுக்கும் கருவிகள் ரூபாய் 5 கோடி செலவில் 50 விழுக்காடு மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
Read also: நெற்பயிர் விவசாயிகளுக்கு நல்ல செய்தி- ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவு!
6. 2000 ஏக்கர் பாசன நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி:
மாநிலத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் பொருட்டு ரூபாய் ஒரு கோடியே பத்து இலட்சம் செலவில் விவசாயிகளின் 2000 ஏக்கர் பாசன நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி மேற்கொள்ளப்படும்.
7.மானாவாரி சாகுபடியின் கீழ் 5000 ஏக்கர் நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி
விவசாயிகளின் கால்நடைகளுக்கு சீரான ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காகவும் தீவனத்தின் சுவை மற்றும் செரிமானத்தை அதிகரிப்பதற்காகவும் மாநிலம் முழுவதும் 5000 ஏக்கர் விவசாயிகளின் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய ரூபாய் ஒரு கோடியே 55 இலட்சம் செலவில் தீவன சோளம் மற்றும் தட்டைப்பயறு விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
8.TNAU-ல் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்களுக்கு பயிற்சி
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தீவன உற்பத்திக்கான மேம்படுத்தப்பட்ட உத்திகள் குறித்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ஆகியோருக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.
9.செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி
ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் ஐந்து இலட்சம் செல்லப் பிராணிகளுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படும்.
10. 400 கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கால்நடை நிலையங்களில் நவீன நோயறியும் கருவிகளை கையாளுவதற்கென 400 கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஒரு கோடி ரூபாய் செலவில் அளிக்கப்படும்.
11. கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மாணவியர் விடுதி: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாணவியர் விடுதிக்கான கட்டடம் கட்டப்படும்.
Read more:
நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?
ஏக்கருக்கு ரூ.730- பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments