விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்றைய தினம் (09.09.2024) கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 9 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தலைமை வகிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையினை தொடங்கி வைத்தார்கள்.
ஒன்றியத்திற்கு ஒரு ஊர்தி:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை (1962) 20.08.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டன.
அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு, ஒன்றியத்திற்கு 1 ஊர்தி வீதம் 11 ஒன்றியங்களுக்கு 11 ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 9 ஊர்திகள் தற்போது வரப்பெற்றுள்ளது. இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி ஒன்றிற்கு வாகன மதிப்பு மற்றும் பராமரிப்பு உட்பட முதல் வருடத்திற்கு ரூ.24.10 இலட்சம் வீதம் மொத்தம் 11 ஊர்திகளுக்கு ரூ2.65 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் மருத்துவ ஊர்திகள் மூலம் தொலைதூர கிராமங்களுக்கும், கால்நடை மருத்துவ சேவை இல்லாத கிராமப் பகுதிகளுக்கும், கால்நடை மருத்துவ சேவைகளை அந்தந்த இடத்திலேயே வழங்கிடவும், நோயுற்ற கால்நடைகளை நீண்ட தூரத்திற்கு அழைத்து செல்வதில் உள்ள சிரமங்களையும் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் அப்பகுதியில் வசிக்கும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் சேவைகள் என்ன?
இந்த ஊர்திகள் மூலம் செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, சினை ஆய்வு, மலடு நீக்க சிகிச்சை, கால்நடை மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுதல், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பங்கேற்று உதவுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் வார நாட்களில் ஞாயிறு தவிர பிற நாட்களில் காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்குத் தேவையான சேவைகள் வழங்கப்படும். மேலும் 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவசர அழைப்புகளை ஏற்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இச்சேவையை கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
உளிக்கலப்பை கொண்டு உழவு- ஏன் அவசியம் தெரியுமா?
வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி !
Share your comments