1. Blogs

மழையின் போது வெளிவரும் மண்வாசனை- இது தான் காரணமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Petrichor (pic:pexels)

பொதுவாக லேசாக மழை தூறினால் கூட ஒருவிதமான மண்ணின் வாசம் மேலெழும்பி வரும். அதனை விரும்பாத மனிதர்கள் உண்டோ இவ்வுலகில்? அது சரி.. அந்த மண் வாசனை ஏன் வருகிறது? அதற்கு பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் என்னவென்று எப்போதாவது நீங்கள் யோசித்து உள்ளீர்களா? அதை தான் இந்த கட்டுரையில் நாம் தெரிந்துக் கொள்ளப்போகிறோம்.

மண் வாசனை திடீரென்று எழுவதற்கான அறிவியல் காரணம் குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திரசேகரன் கிரிஷி ஜாக்ரனுடன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

மண்வாசனை:

இதனுடைய அறிவியல் பெயர் "பெட்ரீசோர்” (PETRICHOR). 1964-ல் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளான இசபெல் ஜாஸ்பியர் மற்றும் ரிச்சர்ட் தாமஸ் ஆகியோரால் மண்வாசனைக்கு ”பெட்ரீசோர்” என்கிற சொல்லினை வழங்கினர். இந்த வார்த்தை ரு கிரேக்க சொல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சொல்லிற்கான பின்னணி என்னவென்றால், பெட்ரோஸ் என்றால் "கல்" என்றும், ரிச்சோர் என்பது தேவர்களின் நரம்புகளில் பாய்கின்ற திரவத்தை குறிக்கிறது. பூமிக்கும், காற்றுக்கும் இடையிலான பரிமாற்றத்தை குறிப்பிடுவதற்காக இந்த வார்த்தை தேர்வு செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மண்வாசனைக்கான காரணங்கள் ?

மழை நீர் மண்ணில் விழுந்தவுடன் மண்ணில் வாழும் நுண்ணுயிர்களான ஆக்டினோமைசிஸ் அல்லது ஸ்டிரெப்டோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யப்படும். இரண்டு முக்கிய இரசாயன சேர்மங்களான ஜியோஸ் மின் மற்றும் மெத்திலிசோபோர்னியோல் ஆகியவை மண்வாசனை வருவதற்கான முதன்மை காரணங்களாக சொல்லப்படுகின்றது.

ஜியோஸ்மின் மிகவும் வலுவான வாசனையுடன் கூடிய ஒருவகையான ஆல்கஹால் மூலக்கூறு ஆகும். பாக்டீரியாக்கள் ஈரமான மண்ணில் செழித்து வளரும், ஆனால் மண்காய்ந்தவுடன் ஒருவிதமான மண்வாசனையை வெளியிடுகிறது.

மழையின் அமிலத்தன்மையும் ஒரு காரணமா?

மண்வாசனை ஏற்பட மழையிலுள்ள அமிலத் தன்மையும் ஒரு வகையான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள இரசாயனங்கள் காரணமாக மழைநீர் ஓரளவு அமிலத்தன்மை (ACIDITY) கொண்டதாக இருக்கலாம். அவை தரையில் விழும் போது மக்கிய கரிம குப்பைகளில் பட்டு வேதிவினை புரிந்து வலுவான வாசனையினை உண்டாக்கலாம்தாவரங்களின் கரிம சேர்க்கையாலும், ஒசோன் படலத்தில் உள்ள வாசனை துகள்கள் காற்று மண்டலத்தில் கலக்கும்போது கூட மண்வாசனை வரலாம் என கருதப்படுகிறது.

மனமாற்றத்தை ஏற்படுத்தும் மண்வாசனை:

மண்வாசனையில் வெளிவரும் ஜியோஸ்மின் என்கிற சேர்மம் நம்மால் நுகரப்படும் போது, புத்துணர்ச்சி வழங்குவதோடு, மன அழுத்தம் வெகுவாக குறைகிறது.

(மேற்குறிப்பிட்ட தகவல்களில் ஏதேனும் முரண்கள்/ சந்தேகங்கள் இருப்பின் கட்டுரை ஆசிரியர் அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் (94435 70289) அவர்களை தொடர்புக் கொள்ளலாம்)

Read more:

இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? உணவு, உபகரணங்கள் இலவசம் !

விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

English Summary: why the soil smell during rains is called as Petrichor Published on: 14 June 2024, 01:57 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.