தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியாகும் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களான பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், மலைத்தோட்டப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் மலர்கள் ஆகியன சுமார் 1,08,244 எக்டர் பரப்பில் சாகுபடியாகிறது.
தோட்டக்கலைப்பயிர்களின் பரப்பை அதிகரிக்கவும். உற்பத்தியைப் பெருக்கவும் தரமான மகசூல் மற்றும் அதிக வருவாய் விவசாயிகள் பெற்றிட அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திட அரசின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
வெங்காய சேமிப்புக்கிடங்கு அமைக்க மானியம்:
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.15.88 கோடி செலவினத்தில் புதிய தோட்டங்கள் அமைத்தல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, பண்ணைக்குட்டை, அறுவடைபின் செய்நேர்த்தி, உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி இனங்களில் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் பணிக்கு 25 மெட்ரிக்டன் கொள்ளளவு கிடங்கு அமைக்க மானியத்தொகை ரூ.87,500 வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3,500 எக்டர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அறுவடைக்குபின் மேலாண்மை என்ற பிரிவின் கீழ், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
50 % மானியத்தில் சிப்பம் கட்டும் அறை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையினை மேம்படுத்தும் வகையில் ரூ.8.15 இலட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பழையதோட்டம் புதுப்பித்தல், நீர்ப்பாசன வசதி மேம்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட சாகுபடி, அங்கக வேளாண்மை, மகரந்த சேர்க்கை அதிகரிப்பதற்கான திட்டம் – தேனீ வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதவீதம் மானியத்தில் சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு போன்றவை ரூ.5.66 கோடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், ஒரு எக்டர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்கள், பசுமாடு, ஆடு ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1.20 கோடி இலக்கீடாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 400 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மேலும் மண்புழு உரப்படுக்கை மற்றும் பயிற்சி செயல்விளக்கம் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் பழனி, ரெட்டியார்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் வேடசந்தூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது
தோட்டக்கலைதுறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற TNHORTNET வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்புகொண்டு இத்திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more:
துவரை சாகுபடியில் ஹெக்டருக்கு 1800 கிலோ மகசூல் தரும் சூப்பர் ரகத்தின் சிறப்பியல்புகள்!
நாடு முழுவதும் 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- எதற்காக தெரியுமா?
Share your comments