1. விவசாய தகவல்கள்

அதிக மகசூல் தரும் டி.எம்.வி.14 (TMV 14) நிலக்கடலை இரகம்- கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TMV 14 (pic: ICAR KVK,CENDECT)

எண்ணெய் வித்துகளின் அரசன் என அழைக்கப்படுவது நிலக்கடலை ஆகும். சராசரி மழை அளவு 650 மிமீ அதிகமாக உள்ள பகுதிகளில் வளரக் கூடியது. நிலக்கடலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் குஜராத், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் நிலக்கடலை மானாவரி பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. சரியான உகந்த இரகங்களை பயிரிடாமை, உகந்த பயிர் மேலாண்மை உத்திகளை கடைபிடிக்காமல் இருத்தல்போன்றவை குறைந்த கசூல் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளது. இந்நிலையில் புதிய நிலக்கடலை பயிர் இரகமான டி.எம்.வி 14 பற்றி பல்வேறு தகவல்களினை தேனி மாவட்டத்திலுள்ள செண்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகளான பொ.மகேஸ்வரன், எம்.அருண்ராஜ், சி.சபரிநாதன் ஆகியோர் ஒருங்கிணைந்து வழங்கியுள்ளனர். அவற்றின் விவரம் பின்வருமாறு-

டி.எம்.வி.14:

  • இந்த இரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினால் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • மானாவாரியில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 2124 கிலோ மகசூல் கொடுக்க கூடியது.
  • துரு நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்பு தன்மை உடையது.
  • 95-100 நாட்களில் மகசூல் தரக்கூடியது.
  • திரட்சியான காய்கள் மற்றும் தரமான பருப்புகளை கொண்டது

நிலம் தயாரித்தல்:

மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவேண்டும்.

நோயை தடுத்து சீரான வளர்ச்சிக்கு விதை நேர்த்தி

தேர்வு செய்த விதைகளை மேங்கோசெப் பூஞ்சாண மருந்துடன் (4 கிராம்/கிலோ விதைக்கு) கலந்து விதைக்க வேண்டும். இதனால் விதை மூலமாக பரவக் கூடிய வேர் அழுகல், தண்டழுகல் நோய்கள் வராமல் தடுக்கலாம். பின்னர் விதைகளை மூன்று பாக்கெட்டுகள் (600 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிரியுடன், ஆறிய வடிக்கஞ்சி சேர்த்து விதையுடன் கலந்து நிழலில் உல வைக்க வேண்டும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால் ரைசோபியம் 10 பாக்கெட்டுகள் ஃஹெக்டருக்கு என்ற அளவில் (2000 கிராம்) 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் சேர்த்து விதைத்து முன் தூவி விட வேண்டும். இதனால் பயிரின் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகி நன்கு செழிப்பாக வளரும்.

பயிர் இடைவெளி

நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ என்ற அளவில் இடைவெளி கொடுத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கும் வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதன் மூலம் பயிர்களின் வள உட்கிரகிப்பு திறன் (நீர், உரம், காற்று) அதிகரித்து பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.

மண் வளம் காத்து மகசூல் பெற, ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகள்

மண்ணின் பௌதீக, இரசாயன மற்றும் உயிரியல் தன்மைகள் மண் வளத்தை பாதிக்காமலிருக்க ஒருங்கிணைந்த உர மேலாண்மை அவசியமாகும். தொழு உரம் கிடைத்தால் ஏக்கருக்கு 12.5 டன்கள் இட வேண்டும்.

தென்னை நார்க் கழிவினை ஹெக்டருக்கு 12.5 டன்கள் என்ற அளவில் புளுரோட்டஸ் பூஞ்சாண விதை மூலம் மக்க வைத்தும் உரமாக இடலாம். மேலும் இரசாயன உரங்களை மண் பரிசோதனையின்படி இடுதல் நல்லது.

பொதுவான உர அளவாக

இறவைக்கு 17:34:54 கிலோ (தழை:மணி:சாம்பல்) சத்துக்களை ஒரு ஹெக்டருக்கு இட வேண்டும். தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்து அடிப்படையாக 50% + விதைத்த 20-ம் நாளில் 25 % மற்றும் விதைத்த 45-ம் நாளில் 25 %-மும் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

களை நிர்வாகம்

விதைப்பதற்கு முன்பு புளுகுளோரலின் (பாசான்) 2 லிட்டர்/ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கப்பட வேண்டும். விதை முளைத்து பின்பு புளுகுளோரலின் 2 லிட்டர் ஃஹெக்டர் 400 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 3-ஆம் நாள் தெளிக்கப்பட வேண்டும்.

மறுவிதை ஊன்றுதல்

விதைத்த 7-வது நாள் மறுவிதை ஊன்ற வேண்டும். சரியான எண்ணிக்கையில் பராமரிப்பதன் மூலம் அதிகப்படியான மகசூல் பெறலாம். மேலும், அதிகப்படியான பயிர்கள் இருப்பின் அவற்றையும் கலைதல் வேண்டும்.

மண் அணைத்தல்

இரண்டாவது களையை 45 வது நாளில் எடுக்க வேண்டும். களை எடுத்ததற்கு பிறகு ஜிப்சம் உரத்தை அளித்து மண் அணைத்து விடுதல் வேண்டும். இதனால் விழுதுகள் கீழே இறங்குவதற்கு ஏதுவாகி காய் பிடிக்கும் திறன் அதிகமாகும்.

Read also: துவரை சாகுபடியில் ஹெக்டருக்கு 1800 கிலோ மகசூல் தரும் சூப்பர் ரகத்தின் சிறப்பியல்புகள்!

ஜிப்சம் இடுதல்

ஒரு ஹெக்டருக்கு 400 கிலோ உரத்தை விதைத்த 40-45 வது நாளில் நிலக்கடலை பயிருக்கு இட வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு 45-60 வது நாள் மண் ஈரத்தைப் பொருத்து அளிக்கப்பட வேண்டும். சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள மண்ணில் ஜிப்சம் இட கூடாது.

ஜிப்சம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகளாவன:

  • காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
  • பிஞ்சு காய்கள் அதிகம் உருவாவது தடுக்கப்படுகிறது.
  • பருப்பின் எடை கூடுகிறது
  • எண்ணெய் சத்தின் அளவு கூடுகிறது.
  • தரமான காய்கள் உருவாகிறது
pic: ICAR KVK,CENDECT , THENI

மேலும் உர மேலாண்மையில் விவசாயிகள் 12.5 கிலோ நுண்ணூட்டச் சத்தை 37.5 கிலோ மணலுடன் சேர்த்து விதைப்பதற்கு முன்பு அளிக்கப்பட வேண்டும். இதனால் மண்ணில் சத்துக்கள் விகிதம் சமமாகி அனைத்து சத்துக்களும் சரிவிகித அளவில் பயிருக்கு கடத்தப்படுகிறது. மேலும் பயிரின் வளர்ச்சியும் சீராக இருக்கும்.

(டி.எம்.வி 14 நிலக்கடலை இரகம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு, பின்வரும் தொடர்பு எண்ணினை தொடர்புக்கொண்டு விஞ்ஞானிகளிடம் நேரடி விளக்கம் பெறலாம். தொடர்பு எண்: 96776 61410)

Read more:

NAMO DRONE DIDI: வேளாண் பணிகளில் பெண்கள்- ரூ.8 லட்சம் வரை நிதியுதவி!

வெங்காய சாகுபடி விவசாயிகளுக்கு குட் நியூஸ்- ரூ.87,500 வரை மானியம்!

English Summary: Major things to cultivate High yielding TMV 14 groundnut variety Published on: 02 November 2024, 04:35 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.