சிறு குறு விவசாயிகள் பவர் டில்லர் வாங்க 20 சதவீதம் கூடுதல் மானியம்!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Power tiller subsidy

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பவர் டில்லர் மற்றும் விசை களையெடுக்கும் கருவியான பவர் வீடர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு, வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.

மானியத்தில் 4000 பவர் டில்லர்:

நடப்பு 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 4,000 எண்கள், விசைக் களையெடுக்கும் கருவி (பவர் வீடர்) 4,000 எண்கள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சமும், விசைக்களை எடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரமும், அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் மானியம் தொடர்பான விவரம்:

ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200/-ம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பவர்டில்லர்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ,88,200/-ம் வரை மானியம் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

உதாரணமாக பவர் டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ.2,40,000/- எனில் ரூ.1,68,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72,000/- மட்டும் செலுத்தினால் போதும். விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.1,30,000/- எனில் ரூ.88,200/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.41,800/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

பொது பிரிவினருக்கு 10% கூடுதல் மானியம்:

பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600/- விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.75,600/- வரை மானியம் பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசைக் களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.80,000/- எனில் ரூ.48,000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32,000/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.

Read also: டிசம்பர் இறுதி வரை பருவமழை- பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு

விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவல்டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட செயற் பொறியாளர், வேளாண்மை பொறியியல் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம், மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் உதவி செயற் பொறியாளார் வேளாண்மை பொறியியல் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி பொறியாளர் வேளாண்மை பொறியியல் அல்லது இளநிலை பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read more:

விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை!

இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்!

English Summary: 20 percent additional subsidy for small and marginal farmers to purchase power tillers Published on: 09 December 2024, 03:54 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.