தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
யாருக்கு எவ்வளவு மானியம்?
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் படி, 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50% (விழுக்காடு) அல்லது ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அவ்வது அதிகப்பட்சம் ரூ.2.25 இலட்சம் மானியம் வழங்கப்படும்.
பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% (விழுக்காடு) அல்லது ரூ 3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com). மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
இதர விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப, தெரிவித்துள்ளார்.
இதையும் காண்க:
மகளிருக்கான ரூ.1000- அக்டோபர் மாதத்தில் 8833 பயனாளிகள் தகுதி நீக்கம்!
Share your comments