தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்தில் மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதுத்தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்களுடைய பழைய திறன் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது. இத்திட்டத்தில் பழைய மோட்டார்களை மாற்றி புதிய திறன் உள்ள மின் மோட்டார்களை பொருத்தும்போது, பாசன காலங்களில் அடிக்கடி பழுது ஏற்படாமல் மின் மோட்டார்கள் தொடர்ந்து இயங்கக் கூடிய வகையில் இருக்கும், பழைய மோட்டார்களுக்கு அதிக செலவு செய்வது தவிர்க்கப்படுகிறது.
மின்மோட்டார் பம்பு செட்டு: பின்னேற்பு மானியம்
அதிக திறனுள்ள புதிய மின் மோட்டாரை பொருத்துவதால் குறைந்த நேரத்தில் தங்கள் வயல்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். இதனால் மின்சாரம் அதிகளவில் சேமிப்பு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்கவும் புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்கவும் மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
நுண்ணுயிர் பாசன திட்டத்தின்கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ISI முத்திரை உள்ள 4-ஸ்டார் தரத்திற்கு குறையாமல் விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க இயலும். மேலும் பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.15,000/- மானியமாக வழங்கப்படுகிறது.
கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள்:
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக் காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்லும்போது பாம்பு கடி, விஷப்பூச்சிக் கடி உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்க நேரிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மின் மோட்டார் அமைந்திருக்கும் இடத்திற்கு செல்லாமலே உலகத்தில் எங்கு இருந்தாலும் தவறிய அழைப்பு, குறுஞ்செய்தி, செயலி மற்றும் IVRS தொடர்புகள் மூலமாகவும் அதனை இயக்க முடியும்.
Read also: விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை!
கைப்பேசி மூலமாகவே தங்களது இருப்பிடத்திலிருந்தே மின்சார பம்பு செட்டுகளை இயக்கவும், மின் இணைப்பு இருக்கின்றதா? மின் மோட்டார் ஓடுகின்றதா? என்பதனை அக்கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், இடி மின்னல், குறைந்த/அதிக மின்னழுத்தம் ஆகியன ஏற்படும்போதும், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைவு ஏற்பட்டாலும் மின் மோட்டாரை (ஆன் / ஆஃப்) செய்து கொள்ளலாம்.
தானியங்கி கருவியின் சிறப்பம்சங்கள்:
ஒரு கருவியில் 5-கைப்பேசி எண்கள் இணைத்து பயன்படுத்தும் வசதியும், விவசாயிகள் நீர் பாய்ச்சும் நேரத்தினை முன்னதாகவே பதிவு செய்துவிட்டால் பதிவு செய்த நேரத்தில் தானாகவே மோட்டார் இயங்கும் வசதி உள்ளது. வேறு நபர்கள் இக்கருவியை களவு செய்ய முயன்றால் செயலி எச்சரிக்கை செய்து விடும். மும்முனை (3-பேஸ்) இணைப்புள்ள 2HP - 10HP திறன் உள்ள அனைத்து மோட்டார் பம்பு செட்டு ஸ்டார்டர்களிலும் பொருத்தலாம், விவசாயிகள் கேட் வாள்வுகளை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச விரும்பினால் கேட் வாள்வுகளையும் கைப்பேசி மூலமாகவே இயக்கிக்கொள்ளலாம்.
இந்த கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள், சிறு/குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000/- வரையிலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000/- வரையிலும் தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டங்களில் பயன்பெற மயிலாடுதுறை, மாவட்ட விவசாயிகள் குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோயில், சீர்காழி வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், துறைக்கண்ணு நகர், மறையூர் ரோடு, சித்தர்காடு, மயிலாடுதுறை. 609003. என்ற முகவரியினை தொடர்புக் கொள்ளலாம்.
மேலும் 5 வட்டார உதவிப் பொறியாளர்கள் R. சத்தியப்பிரியா, மயிலாடுதுறை 9597922788, G. செந்தில்குமார், குத்தாலம் 9965056209, R. கீர்த்திவாசன், செம்பனார்கோயில் 8098582064, S. பார்த்தசாரதி, கொள்ளிடம் 9600765868, மற்றும் S. சேகரன், சீர்காழி 9585929295. ஆகியவர்களையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Read more:
சிறு குறு விவசாயிகள் பவர் டில்லர் வாங்க 20 சதவீதம் கூடுதல் மானியம்!
இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்!
Share your comments