1. தோட்டக்கலை

semmozhi poonga: ஒரே இடத்தில் காணக்கிடைக்காத மலர்கள்- சென்னை மக்களுக்கு நல்ல வாய்ப்பு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Chennai's 4th flower show at semmozhi poonga

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.1.2025) வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சென்னையின் நான்காவது மலர் காட்சியை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ் தலங்களில் உள்ள பூங்காக்களில் கோடை விழா நிகழ்ச்சிகள் மற்றும் மலர் காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இதைப்போன்று, சென்னை மக்களை கவரும் வகையில் 2022- ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

மலர் காட்சிக்கு மக்கள் தந்த வரவேற்பு:

தோட்டக்கலை பயிர்களின் வளத்தையும், வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் நோக்கில் கடந்த மூன்று மலர் காட்சிகள் நடத்தப்பட்டன. இக்காட்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

சென்னையில் முதல் மலர் காட்சி கலைவாணர் அரங்கில் 3.6.2022 முதல் 5.6.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதனை 44,888 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். செம்மொழி பூங்காவில் 3.6.2023 முதல் 5.6.2023 வரை நடைபெற்ற இரண்டாவது சென்னை மலர் காட்சியினை 23,302 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். இக்காட்சிகளில் பல்வேறு வண்ண அயல்நாட்டு மற்றும் பூர்வீக கொய்மலர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மூன்றாவது மலர்க்காட்சி செம்மொழி பூங்காவில் 10.2.2024 முதல் 20.2.2024 வரை 11 நாட்கள் நடைபெற்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இம்மலர் காட்சியில் முழுவதும் பலவண்ண பூச்செடிகள் மற்றும் அழகுத்தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.  இதனை 1,09,027 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

நடப்பாண்டு என்ன ஸ்பெஷல்?

தற்போது, நான்காவது சென்னை மலர் காட்சி ஜனவரி 2025-இல் செம்மொழிப் பூங்காவில் நடைபெறுகிறது. இதில் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரியம், பெண்டாஸ், சாமந்தி, டயாந்தஸ், சினியா, டொரினியா, கேலண்டுலா, கோழிக்கொண்டை, வாடாமல்லி, பான்ஸி, டெல்ஃபினியம், பால்சம், ஹைட்ராஞ்சியா, பாய்ன்செட்டியா, பென்ஸ்டிமான், டேலியா, கல்வாழை, சூரிய காந்தி, வெர்பினா, ஆன்டிரினம், ஜெரேனியம், பென்டாஸ், வயலா, ஜெர்பரா, ஆர்கிட்ஸ், நித்தியகல்யாணி, ப்ரிமுலா, வெட்சி, கேலா லில்லி, ஆஸ்டர், டெய்சி, போன்ற 50-க்கும் மேற்பட்ட வண்ண பூச்செடி வகைகளுடன் அலங்கரிக்கப்பட்ட யானை, பட்டாம் பூச்சி, இரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்டிலைன், அக்லோனிமா, எராந்திமம், ஃபிலோடென்ட்ரான் போன்ற பல்வேறு அலங்கார இலைத்தாவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சிறப்புமிக்க மலர் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர், பூங்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட்டார். தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Read more: வேளாண் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததா ICAR?

டிக்கெட் பெறுவது எப்படி?

இம்மலர்காட்சி ஜனவரி 2-ஆம் தேதியான இன்றையதினம் தொடங்கி 18.1.2025 வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும். https://tnhorticulture.in/spetickets/ ஆன்லைன் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Read more:

பலத்த அடி வாங்கிய எண்ணெய் வித்து பயிர்கள்: ஆறுதல் அளித்த கோதுமை

OTP காய்களின் விலை ஏன் கட்டுக்குள்ளே இருக்கு? மில்லினியர் விவசாயி சிவதேவன் நேர்காணல்

English Summary: CM Stalin inaugurates Chennai's fourth flower show at semmozhi poonga Published on: 02 January 2025, 02:40 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.