தானியங்களின் அரசி என்று அழைக்கப்படுகின்ற மக்காச்சோளம் பயிர் இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமானது. இந்நிலையில், மக்காச்சோள பயிரில் பூச்சிகள் மற்றும் விலங்குகளின் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திரசேகரன் பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
தமிழகத்தில் சாரசரியாக 3.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் இறவை மற்றும் மானாவாரியாகவும் பயிரிடப்படுகிறது. முக்கியமாக தென் மாவட்ட கரிசல் நிலங்களில் அதிகமாக கடந்த சில ஆண்டுகளாக மானாவாரியாக பயிரிடப்படுகின்றன. மக்காச்சோளம் கால்நடை தீவனமாகவும் எத்தானல் தயாரிப்பதிலும் முக்கிய பங்காற்றுவதால் இதனுடைய தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பூச்சி மற்றும் விலங்குகளின் தாக்குதல்:
மக்காச்சோள சாகுபடியில் தற்போது இரண்டு முக்கிய பிரச்சனைகள் குறிப்பாக படைப்புழு தாக்குதல் மற்றும் வன விலங்குகளான அணில், முயல் மயில் தொந்தரவுடன் காட்டு பன்றிகளின் தாக்குதலும் அதிகமாக உள்ளது. இதனாலே பல விவசாயிகள் மக்காச்சோள பயிருக்கு மாற்றாக எள்,ஆமணக்கு போன்ற பயிர்வகைகளை சாகுபடி செய்ய முன்வந்துள்ளனர்.
ஒருங்கிணந்த முறையில் இவற்றை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.
1)படைப்புழு (FALL ARMY WARM)
இது வெளிநாட்டு வரவின பூச்சி, இதனுடைய தாயகம் அமெரிக்கா. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் தென்பட்டு படிப்படியாக தமிழகத்தில் தாக்குதல் அதிகமாகி வருகிறது. மக்காச்சோள சாகுபடியில் விதைத்த 15-வது நாளில் இருந்து கதிர் அறுவடை வரை தாக்குதல் இருக்கும். மக்காச்சோள சாகுபடி சமயத்தில் இந்த படைப்புழு 3 தலைமுறை (GENERATION) எடுத்து தாக்கும். இளம்புழுக்கள் தான் அதிகமாக குருத்து பகுதியில் தாக்கும், நடுக்குருத்துகளை குடைந்து துளை போட்டும் உண்ணும். மண்ணில் கூட்டுபுழுக்கள் சில சமயங்களில் தங்கிவிடும்.
கட்டுப்படுத்திடும் வழிமுறைகள்:
- கோடை உழவு போடுதல்.
- ஏக்கருக்கு 100 கிலோ வேப்ப புண்ணாக்கு அடியுரமாக இடுதல்.
- மக்காச்சோள விதைக்கு விதைநேர்த்தி: ஒருகிலோ விதைக்கு 10 கிராம் பேவரியா பேசியானா என்ற உயிர் பூச்சிக் கொல்லி மருந்து கலந்து விதைத்தல்.
- ஊடுபயிராக தட்டைப்பயறு , உளுந்து சாகுபடி.
- வரப்பு பயிராக நிலத்தைச்சுற்றி கம்பு எள் ஆமணக்கு சென்டுமல்லி சாகுபடி செய்தல்.
- இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 எண்ணம் வைத்தல்.
- பறவை தாங்கிகள் 5 எண்ணம்.
- 20-25 வது நாளில் அசாடிராக்டின் 1000PPM மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 20மி.லி கலக்க வேண்டும் அல்லது பேவரியா பேசியானா 50 கிராம் மருந்தை/ 10லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
- 40-45 வது நாளில் எமடிக்டின் பென்சோவட் 4கிராம்/ 10 லிட்டர் அல்லதுகோராசின் 40 mL எதாவது ஒன்றை தெளிக்க வேண்டும்.
- பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்.
வனவிலங்குகளின் தாக்குதல்:
மக்காச்சோளத்தில் விதைப்பில் இருந்து அறுவடை வரை வனவிலங்குகள் தாக்குதல் இருக்கும். இந்திய வனவிலங்குச் சட்டம் 1972-ன் படி வனவிலங்குகளை கொல்லுவதோ, வேட்டையாடுவதோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஒருங்கிணைந்த முறையில் வனவிலங்குகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பின்வருமாறு-
- விதைத்த பயிரை மயில்கள் கிளறி சாப்பிடும். அதை தடுக்க அழுகிய முட்டைகளை தெளிக்க வேண்டும். இந்த தூர் வாடைக்கு மயில்கள் நடமாட்டமே குறையும்.
- முளைத்த பயிரை அணில்கள், முயல்கள், மான்கள் வெட்டி போடும். இவற்றை தடுக்க பசுஞ்சாணி கரைசலுடன் கோமியம் கலந்து வரப்புயோரங்களில் தெளிக்க வேண்டும். அதிகமாக தென்பட்டால் HERBELIVE REPELLANT-யை பயன்படுத்தலாம்.
- காட்டுபன்றியை விரட்டிட வேலி அமைக்க வேண்டும். சூரிய மின்சார வேலி கூட அமைக்கலாம்.
- காட்டுப்பன்றிக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதால் அது வரும் பாதையை கண்டறிந்து தலைமுடியினை (சலூன்கடை முடி) தூவி விடலாம். அது அதனை முகர்ந்து பார்க்கும்போது மூக்கில் குத்தும் இதனால் வந்த பாதையிலே ஓடி விடும்.
- கலர் கலரான சேலைகள் துணிகளை நிலத்தை சுற்றி வேலியாக கட்டலாம்.
- செயற்கையான சப்தம் எழுப்பும் கருவிகளை நிலத்தில் அமைக்கலாம்.
- வரப்புயோரங்களில் அகழி காண் (பள்ளம்) வெட்டலாம். பன்றி நடமாடும் பாதையிலும் வெட்டலாம்.
- விரிஞ்சிபுரம் இயற்கை காட்டுப்பன்றி விரட்டியை பயன்படுத்தலாம்.
Read also: தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடி- உழவு மேற்கொள்ள பின்னேற்பு மானியம்!
- இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து பன்றிகளை விரட்டலாம்.
- கிராமப்புற இளைஞர் ஒன்று சேர்ந்து கூட்டாக இரவு காவல் பணியினை அறுவடை நேரங்களில் மேற்கொண்டு பன்றிகளை விரட்டலாம்.
மேல் குறிப்பிட்ட முறைகளை சரியாக கையாண்டாலே எளிதாக படைப்புழு மற்றும் வனவிலங்குகளின் தாக்குதலிருந்து பயிரினை காப்பாற்றலாம், மகசூலையும் பெருக்கலாம் என வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். (மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289)
Read more:
நெல்- வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்?
Share your comments