Credit : Seithipunal
பருவமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்ப விரதம்
பொதுவாகக் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, விரதம் கடைப்பிடிக்கும் மாதம். இதனால், கோவில்கள், பக்தர்கள் சபை உள்ளிட்ட இடங்களில் பூக்களின் தேவை அதிகளவில் இருக்கும்.
அதேநேரத்தில், இந்த மாதங்களில் பருவமழை மற்றும் பனிப்பொழிவு உள்ள காலங்கள் என்பதால், பூச்சந்தைகளில் பூக்கள் வரத்தும் குறைவாகவேக் காணப்படும். இதனால் பூக்களின் விலை, கடந்த மாதங்களில் கூடுதலாக இருப்பது வாடிக்கை.
பூக்கள் வரத்து
அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு, திருவள்ளூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, நிலக்கோட்டை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பூக்கள் வரத்து உள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை மற்றும் தற்போதுள்ள பனிப்பொழிவு காரணமாக, பூக்கள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. நிலக்கோட்டை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை பூ வரத்து உள்ளது.
விளைச்சல் பாதிப்பு (Yield impact)
கார்த்திகை மாதம் சுபமுகூர்த்தங்கள், வீடு கிரஹபிரவேச நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும் என்பதால், எப்போதுமே இம்மாதம் காய்கறி, பூக்கள் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால், இம்முறை மழையால் விளைச்சல் பாதிக்க, வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை நிலவரம் (Rate)
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 2,400 முதல் ரூ.3,600 ரூபாய் வரைக்கு விற்பனையானது.
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி (Customers shocked)
முல்லை ரூ.2,000க்கும், கனகாம்பரம், ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும், ஜாதி மல்லி ரூ.600க்கும், ரோஜா ரூ.200 முதல் 240 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
பூக்களின் இந்த ராக்கெட் வேக விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!
நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!
Share your comments