இன்றைய சூழலில் நிலவும் காய்கறிகளின் விலை உயர்வு, காய்கறிகளின் முக்கியத்துவத்தை அறியாமை, நகரப்பகுதிகளில் பயிரிட போதுமான நிலம் இல்லாமை ஆகியவற்றால் ஒவ்வொருவரும் தினசரி உட்கொள்ளும் காய்கறிகளின் அளவு குறைந்து வருகின்றது.
இந்நிலையில் நமது வீடுகளில் காய்கறி தோட்டம் அமைத்து நமது வீட்டிற்கு தேவைப்படும் அனைத்து காய்கறிகளையும் அங்கக முறையில் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும். மாடித்தோட்டம் அமைப்பதற்கு இடத்தினை தேர்வு செய்வது எப்படி? அதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னவெல்லாம்? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்டம் காந்திராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் மையத்தினை சேர்ந்த முதுநிலை விஞ்ஞானியான முனைவர்.சு.செந்தில்குமார் பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மாடித்தோட்டம் திட்டமிடல்:
மாடியில் உள்ள இடத்தின் அளவு மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் இடங்கள் போன்றவற்றுடன் மாடியின் உறுதி தன்மைகளை பொருத்தும், எந்த செடிகளை வளர்க்க வேண்டும், நடைபாதைகளுக்கு எவ்வளவு இடைவெளி வேண்டும் போன்றவற்றை கணக்கிட்டு பல்வேறு காய்கறிப்பயிர்கள் வளர்ப்பதற்கு தேவையான இடங்களை திட்டமிட்டு தேர்வு செய்ய வேண்டும்.
மாடித்தோட்டத்தின் வகைகள்:
வீட்டு மாடித் தோட்டத்தினைத் திறந்தவெளி மாடித்தோட்டம் மற்றும் நிழல்வலைக் குடில் மாடித்தோட்டம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
இந்த இரண்டு வகைகளில் நிழல்வலை குடில் காய்கறி தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பது, திறந்தவெளி மாடித்தோட்டத்தை விட கூடுதல் மகசூல் கிடைக்கும். மேலும் வருடம் முழுவதும் இந்த அமைப்பில் மகசூல் பெற முடியும். இந்த வகை நிழல்வலைக் குடிலினால் சூரிய ஒளி பாதியளவு கட்டுப்படுத்தப்பட்டு வெப்பம் அதிகம் நிலவும் மாதங்களிலும் தொடர்ந்து அதிக காய்கறிகளை தரமாக உற்பத்தி செய்ய முடியும்.
இடம் தேர்வு செய்தல்:
ஒரு குடும்பத்தில் ஆறு நபர்கள் இருந்தால், இவர்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு குறைந்த அளவு 30 X 20 அடி அதாவது 600 சதுர அடி பரப்பளவு இருக்க வேண்டும். இந்த அளவில் சிறிது குறைவாக இருந்தாலும், அவ்விடத்திலும் மாடித்தோட்டம் அமைக்கலாம். குறைவான மாடிபரப்பளவு உள்ள வீடுகளில், சந்தையில் அதிக விலைக்கு விற்கக்கூடிய காய்கறிகளை மாடித்தோட்டத்தில் உற்பத்தி செய்யலாம். மற்ற காய்கறிகளைத் தேவைக்கேற்ப சந்தையில் அல்லது கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
அதிக பரப்பளவு உள்ள இடங்களில் குடும்பத்தினரின் தேவைக்கேற்ப தோட்டத்தை அமைக்கலாம். மாடித்தோட்டம் அமைக்கும்முன் மாடியில் நீர்ப்பாசனம் செய்யும் பொழுது தேவைக்கேற்ப செடிகளுக்கு நீரினை அளித்து, மாடியில் நீர்த்தேங்காமல் கவனத்துடன் செயல்பட்டு, கட்டிடங்கள் சேதமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்படும் பொருட்கள்:
காய்கறிப் பயிர்களை அனைத்து வகை அளவு கொண்ட தொட்டிகளில் வளர்த்தாலும், பொதுவாக 45, 60, 72 சென்டி மீட்டர் விட்டமும், 20 முதல் 30 சென்டி மீட்டர் ஆழமும் கொண்ட தொட்டிகள் அல்லது வளர் பைகள் உகந்தவை. இவற்றின் அடிப்பகுதியில் அதிக தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதியான சிறிய துவாரம் ஏற்படுத்த வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களை பயிரிடலாம். இந்த தொட்டிகளில் மண்ணிற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட தென்னைநார் கழிவுகள் அல்லது மண், மணல், மக்கிய தொழுஉரம் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து வளர்ச்சி ஊடகமாக பயன்படுத்தலாம்.
Read also: மக்காச்சோளம் சாகுபடி: முதலுக்கு மோசம் செய்வது படைப்புழுவா? காட்டுப்பன்றியா? கட்டுப்படுத்த என்ன வழி?
கீரை மற்றும் கொத்தமல்லி செடிகளை வளர்ப்பதற்கு உயரம் குறைவாக மற்றும் அகலமான தொட்டிகள் (அல்லது) பைகளை பயன்படுத்தலாம்.
பொதுவாக காய்கறிப்பயிர்கள் திறந்த வெளியில் வளரக்கூடியவை. வெயில் அதிகம் உள்ள மாதங்களான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் போன்ற மாதங்களில், காணப்படும் அதிக வெப்பத்தினால் பயிர்களின் இலைகள் வாடியோ அல்லது கருகிவிடவோ வாய்ப்புள்ளதால் 50 சதவிகிதம் நிழல் தரக்கூடிய நிழல்வலையை பயன்படுத்துவதன் மூலம் பயிர்களை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பாதுகாத்து வருடம் முழுவதும் தொடர்ந்து மகசூல் பெறலாம்.
Read more:
நெல்- வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பசுந்தீவன சாகுபடிக்கு மானியத்தில் இடுப்பொருள் மற்றும் புல்நறுக்கும் கருவி!
Share your comments