தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடப்பு சம்பா, தாளடி பருவ அறுவடை நெல்லை கொள்முதல் செய்வதற்காக நாளது (09.01.2025 வரை) தேதியில் 1176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5,48,422 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும், அக்டோபர் 1-ம் தேதி துவங்கும் நெல் கொள்முதல் பருவத்தினை விவசாயிகளின் நலன் கருதி செப்டம்பர் மாதம் முதல் துவங்க கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்றதைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நெல் கொள்முதல்- மாநில அரசின் ஊக்கத்தொகை:
மேலும், கே.எம்.எஸ் 2023-2024-ஆம் கொள்முதல் பருவத்தில் நெல் கொள்முதலை அதிகரிக்க ஏதுவாக, விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில அரசால் ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75/ லிருந்து ரூ.107/ ஆகவும், பொது ரகம் ரூ. 50 லிருந்து ரூ. 82 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.
மேலும் நடப்பு கே.எம்.எஸ் 2024-2025 ஆம் கொள்முதல் பருவத்திற்காக ஏற்கனவே, வழங்கி வந்த ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு முறையே சன்னரகம் ரூ. 107 லிருந்து ரூ.130 ஆகவும், பொதுரகம் ரூ.82 லிருந்து ரூ.105 ஆகவும் உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒரு குவிண்டால் சன்னரகம் நெல் ரூ.2,450/-க்கும் பொதுரகம் நெல் ரூ.2405/-க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த கே.எம்.எஸ் 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய பருவங்களில் சுமார் 40 இலட்சம் மெ.டன்னிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நடப்பு கே.எம்.எஸ் 2024- 2025-ஆம் பருவத்தில் 01.09.2024 முதல் 09.01.2025 வரை 75,936 விவசாயிகளிடமிருந்து 5,48,422 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதலுக்கான விலையாக ரூ.1,313.96 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
உழவர் உதவி மையம் சேவை:
தமிழ்நாட்டில் சம்பா, தாளடி நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், நாளது தேதியில் 1176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பு கொள்முதல் பருவத்திற்காக 8281 பருவகாலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 3448 எண்ணிக்கையிலான தூற்றும் இயந்திரங்கள், 3980 எண்ணிக்கையிலான ஈரப்பத சோதனை மானிகள், தேவையான அளவு காலிசாக்குகள் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பது மற்றும் புகார்கள் தொடர்பாக தலைமை அலுவலக உழவர் உதவி மையம் சேவை 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தேவையான கூடுதல் இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து எவ்வித புகாருக்கும் இடமின்றி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Read more:
உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட்
வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்!
Share your comments