1. செய்திகள்

கோடை மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் மிளகாய் வத்தல் விவசாயம் பாதிப்பு

Harishanker R P
Harishanker R P

விளாத்திகுளம் பகுதியில் கோடை மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் மிளகாய் வத்தல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் யூனியன், புதூர் யூனியன், ஓட்டப்பிடாரம் கிழக்கு வட்டாரங்களில் மானாவாரி நிலங்களில் பருவமழையின்போது புரட்டாசி ராபி பருவத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மிளகாய், வெங்காயம் போன்ற பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

குறிப்பாக விளாத்திகுளம் சம்பா மற்றும் முண்டு வத்தல் உலக புகழ்பெற்று விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வத்தல்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயில் அதிகமாக இருந்ததால் செடியிலேயே மிளகாய் வத்தல் நிறம் மாறி தரம் பாதிக்கப்பட்டு சோடையாக மாறியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மிளகாய் வத்தல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முண்டு மற்றும் சம்பா வத்தல் குவிண்டாலுக்கு ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு அதிகபட்சமாக ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது விலை மேலும் குறைந்து ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையே விற்பனையாகிறது.

வத்தல் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் ஏராளமானோர் தங்கள் அறுவடை செய்த வத்தலை விற்பனை செய்யாமல் வீடுகளிலும், தனியார் கூடங்களிலும் சேமித்து வைத்து வருகின்றனர். சிலர் பொது இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வத்தல்களை உலர வைத்து சேமித்து வைத்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது விளாத்திகுளம் தொகுதி முழுவதும் கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் வத்தலை முழுமையாக பாதுகாப்பாக வைக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கோடை மழையின் தாக்கத்தால் வத்தல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

செடிகள் நன்கு வளர்ந்து காய்பிடித்து அறுவடை செய்யும் தருவாயில் இருந்த உளுந்து, பாசி செடிகள் கடந்த டிசம்பர் 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பெய்த கனமழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டதால் கைக்கெட்டியது வாய்க் கெட்டாமல் போய் விட்டது.

வடகிழக்கு பருவமழை கடந்த காலங்களில் டிசம்பர் மாதம் 15ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்தாண்டு பருவநிலை மாற்றத்தால் திடீரென பெய்து வருகிறது. சில பகுதிகளில் வெங்காயம் சுமாரான வகையிலும், சில பகுதிகளில் விளைந்து அழுகிவிட்டன

தற்போது மிளகாய் பழம் பறிப்பு நடைபெற்று வருகிறது. வாராவாரம் மழை பெய்வதால் செடியில் உள்ள பழங்களை உரிய காலத்தில் பறிக்க முடியவில்லை. மழை இல்லாத ஒரு நாள் இடைவெளியில் பறித்த பழங்களை களத்தில் காய வைக்க முடியவில்லை.

திடீரென மழை பெய்து விடுகிறது. ஏக்கருக்கு 2 முதல் 4 குவிண்டால் வரை கிடைக்க வேண்டிய வத்தல் அதிகபட்சமாக 2 குவிண்டால் கிடைப்பது அரிதாக உள்ளது. விளைச்சல் இருந்தால் கூட பாதிக்கு மேல் சோடையாக மாறிவிடுகிறது. குவிண்டால் துவக்கத்தில் நல்ல வத்தல் ரூ.18 ஆயிரம் வரையில் இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பின்னர் வத்தல் ரூ.15 ஆயிரம் வரையில் மட்டுமே விற்பனையாகிறது, என்றார்.

உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்:

ஜனவரி மாதம் பிற்பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசி, கொத்தமல்லி, மிளகாய் சாகுபடி பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கணக்கெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எந்த விவசாய பொருளுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

இருப்பினும் விவசாயிகள் வங்கிகளிலும், வட்டிக்கும் கடன்களை பெற்று தொடர்ந்து விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில் மிளகாய் வத்தல் விலை குறைவு மற்றும் மழையால் தரம் பாதிப்பு போன்றவற்றால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் நேரடி ஆய்வு:

விளாத்திகுளம் தொகுதி முழுவதும் கோடை வெயில் மற்றும் கோடை மழையின் காரணமாக மிளகாய் வத்தல் விவசாயம் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். பாரபட்சமின்றி அரசிற்கு முழுமையான தகவல்களை வழங்கி தொகுதி முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நியாயமான நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Related links:

மக்கள் நலனுக்காக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயி

வேளாண் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

English Summary: Chilli farming affected by summer rains and excessive heat Published on: 08 April 2025, 04:59 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.