
பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தல்லேவால், இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையான கனெளரியில், பஞ்சாப் விவசாயச் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதற்கிடையே, அவரது உடல்நிலை மோசமடைந்தபோதிலும் சிகிச்சைக்கு மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வந்தார்.
உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அவர் மருத்துவச் சிகிச்சையை ஏற்காமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதற்கிடையே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலையும் மத்தியக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, தல்லேவால் மருத்துவச் சிகிச்சைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனாலும், கோரிக்கைகள் நிறைவேறும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என தல்லேவால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தல்லேவால், இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங், “இன்று தண்ணீர் ஏற்றுக்கொண்டு தல்லேவால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்" எனத் தெரிவித்தார்.
இதை வரவேற்ற நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும் நீதிபதிகள், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, சர்வான் சிங் பந்தர், காகா சிங் கோட்டா மற்றும் அபிமன்யு கோஹர் உள்ளிட்ட 245 விவசாயிகளைக் கொண்ட கடைசி குழு இன்று அதிகாலையில் பாட்டியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்தே அவர், தண்ணீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more:
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
Share your comments