
பல முறை புகார் தெரிவித்தும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை, துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. செப்., அக்.., மழைநீரில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இதுவரை நிவாரணம் அறிவிக்கவில்லை என பல்வேறு குறைகளை தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குமுறலை வெளிப்படுத்தினர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குநர் மோகன்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு சங்கம் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொ) பாஸ்கரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டடத்தில் நடந்த விவாதம்:
பாலசுந்தரமூர்த்தி, முன்னாள் தலைவர், பெரிய கண்மாய் பாசன கண்மாய் சங்கம், ராமநாதபுரம்: பெரிய கண்மாய் நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தேன். நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாயை துார்வார வேண்டும். 2ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
கலெக்டர்: பெரியகண்மாய் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றவும், நீர் இருப்பு உள்ளதால் பாசனத்திற்கு வழங்கவும் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மிக்கல், விவசாயி, பொன்னக்கனேரி, முதுகுளத்துார்: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் துார்வாரப்படுகின்றன. ஆனால் எங்கள் ஊர் கண்மாய் 72 ஏக்கரில் உள்ளது துார்வாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பொதுப்பணித்துறை உதவியுடன் துார்வார வேண்டும் என்றார். இதற்கு ஆதரவாக ஊராட்சிகளில் 50 ஏக்கருக்கு மேல் உள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறையினருடன் இணைத்து துார்வார வேண்டும் என விவசாயிகள் பேசினர்.
கலெக்டர்: விவசாயிகள் 50 ஏக்கருக்கு மேல் துார்வாரப்படாமல் உள்ள கண்மாய்கள் விபரங்களை அளித்தால் அவற்றை பொதுப்பணித்துறை மூலம் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
காவஸ்கர், விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு, திருவாடானை: கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் உள்ளது. கட்டுப்படுத்த வேண்டும். சிவகங்கையில் கால்நடைகள் வாங்க கூட்டுறவு சங்கங்களில் நகையின்றி கடன் வழங்குகின்றனர். அதுபோல ராமநாதபுரத்திலும் வழங்க வேண்டும்
ஜினு, இணைப்பதிவாளர்: கூட்டுறவு சங்கங்களில் கால்நடைகள் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் ரூ.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது. இதனால் நகையை பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்குகிறோம்.
முத்துராமு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர், ராமநாதபுரம்: அக்.,நவ., மாத மழையில் பல ஆயிரம் ஏக்கரில் விளைச்சல் நிலங்கள் சேதமடைந்துள்ளது. ஆனால் இதுவரை வெள்ள நிவாரணம் அறிவிக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் கடனை கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டரின் நேர்முக உதவியார் பாஸ்கரமணியன்: மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் கணக்கெடுப்பு முடிந்து ரூ.13 கோடி தோட்டக்கலை, ரூ.14கோடி நெற்பயிர் என ரூ.27 கோடி வரை நிவாரணம் கோரி கலெக்டர் வழியாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திராஜன், ராமநாதபுரம்: சூரன்கோட்டை ஊருணி இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலி, வீடு அமைத்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டை போல 2ம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
கலெக்டர்: விவசாயி புகார் குறித்து விசாரித்து ஊருணி ஆக்கிரப்பை அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதுபோன்று காட்டு மாடுகள், காட்டு பன்றிகளால் பயிர்சேதம், கமுதி, பரமக்குடி சோலார் அமைக்க நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
விவசாயிகளின் புகார் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
Read more:
விவசாய தலைவர் தல்லேவால் உண்ணாவிரதம்.. 113 நாட்களுக்குப் பிறகு முடித்துவைப்பு!
மதிப்புக்கூட்டலில் சாதிக்கும் வேதாரண்யத்தைச் சேர்ந்த பெண் விவசாயி!
Share your comments