1. செய்திகள்

மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்

Harishanker R P
Harishanker R P

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 13 ஆயிரம் ஏக்கரை தாண்டி நடவு பணி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

13ஆயிரம் ஏக்கரில் நாற்று நடப்பட்டு கோடை நெல் சாகுபடி தீவிரம்:

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, போராவூரணி, அதினாம்பட்டினம், சேதுபவாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நெல் மட்டுமின்றி கரும்பு, வாழை, எள், உளுந்து, சோளம், வெற்றிலை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

ஆனால் பரவலாக மாவட்டம் முழுவதும் நெல் தான் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். இந்த நிலையில் தற்போது கோடை நெல் சாகுபடியானது தஞ்சை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு தாமதமாக ஜூலை மாதம் 28ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடை பெறவில்லை. சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது.

தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளன.இதனால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாய்நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு நடவுப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 91 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் உழவுப்பணிகள், நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 500 ஏக்கருக்கும் குறைவாகவே அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடியில் எக்டேருக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது. தற்போது கோடை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்புவைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more:

வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயம்- அசத்தும் நத்தம் விவசாயி

English Summary: Farmers in Thanjavur district waiting for water from Mettur dam Published on: 05 April 2025, 02:54 IST

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.