கரும்பு பயிரை குரங்குகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற கரடி போல் வேடமணிந்து விவசாயிகள் காவல் காக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விவசாயம் என்பது தற்போதைய காலத்தில் அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை. ஒரு பயிரினை பயிரிட்டு அதனை அறுவடை மேற்கொண்டு சந்தையில் விற்பனை செய்யும் வரை விவசாயிகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன. பூச்சிகள் மட்டுமின்றி விலங்குகளும் பயிர்களை தொடர்ச்சியாக தாக்கி வருகின்றன. இது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் தான், உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் பயிரிட்டுள்ள கரும்பு பயிரினை குரங்குகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றன. அப்பகுதியில் மட்டும் சுமார் 40 முதல் 45 குரங்குகள் சுற்றி வருவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இதுக்குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் இப்பகுதி குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தாங்களே ஒரு திட்டத்தை வகுத்தனர். அதன்படி விவசாயிகள் 4,000 ரூபாய்க்கு கரடி உடை வாங்கி உள்ளனர். குரங்குகளை விரட்டுவதற்காக கரடி ஆடையினை போட்டுக்கொண்டு இராப்பகலாக பயிரினை காவல் காக்கின்றனர். இதுத்தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் இப்பிரச்சினை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ANI உடனான ஒரு உரையாடலில் அப்பகுதி விவசாயி கஜேந்தர் சிங் கூறுகையில், “பயிர்களை குரங்குகள் தாக்கும் பிரச்சினை குறித்து முறையாக அதிகாரிகளிடம் கூறப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. அதனால் நாங்களே குரங்குகளை விரட்ட கரடியாக மாறியுள்ளோம். இனிமேலாவது விவசாயிகள் பிரச்சினையினை அதிகாரிகள் காது கொடுத்து கேட்க வேண்டும். அதை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது வேதனையினை பகிர்ந்து உள்ளார்.
இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், வனத்துறை அலுவலர் சஞ்சய் பிஸ்வால், “விவசாயிகளின் பிரச்சினையை நாங்கள் நன்கு உணர்கிறோம். அவர்களுக்கு உறுதியளிக்கிறேன், குரங்குகளின் நடவடிக்கையினை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாக” தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் நெற்பயிர்களை காட்டுப்பன்றி அதிகளவில் தாக்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. காட்டுப்பன்றி தவிர்த்து யானை போன்ற பெரிய வனவிலங்குகளும் பயிர் மற்றும் தோப்புகளை தாக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வனத்துறையினர் விலங்குகளின் பயிர்த்தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவிக்கையில், உணவுத் தேடி பெரும்பாலான விலங்குகள் காடுகளிலிருந்து வெளியேறி ஊருக்குள் நுழைகின்றன. இதனை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
pic courtesy: ANI
மேலும் காண்க:
Share your comments