
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா பஞ்சநதிக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பணிகளைப் பார்வையிட்டார்.
Read more:
மேகதாது அணை விவகாரம்: பூட்டு போட கிளம்பிய விவசாயிகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''தஞ்சாவூர் மாவட்டம் பஞ்சநதிக்கோட்டையில் முன்னோடி திட்டமாக ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒரு மணி நேரத்திற்கு 15 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யும் வகையில், இன்றைக்கு இந்த மெகா கொள்முதல் நிலையம் அமைந்திருக்கிறது.
இதனால் இங்குள்ள விவசாயிகள் பயனடைவார்கள். வருங்காலங்களில் பல்வேறு பகுதிகளில், மாவட்டங்களில் இதன் செயல்பாடுகளை பொறுத்து விரிவுபடுத்த உள்ளோம். தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
நெல் ஈரப்பதத்துடன் இருந்தால் உலர வைக்கப்பட்டு, 40 கிலோ எடை வைத்து பேக்கிங் செய்து கன்வேயரில் சென்று மூட்டையாக லாரியில் சேர்க்கின்ற முறையில் இது உள்ளது. கடந்த ஆண்டை விட 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக வந்துள்ளது.
இது குறித்து விவசாயி ரவிச்சந்தர் கூறுகையில், '' கொள்முதல் நிலையத்தில் எடைக்குறைப்பு என்ற மோசடி இல்லாமல் இனி நெல்லை போட முடியும். பத்து கொள்முதல் நிலையத்தில் செய்ய வேண்டிய பணியை இந்த ஒரு கொள்முதல் நிலையம் ஒரு மணி நேரத்தில் செய்து விடும்'' என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.முரசொலி, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Read more:
3,000 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் இருப்பு கண்டுபிடிப்பு.., விவசாயிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்
Share your comments