"இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் வேளாண் விஞ்ஞானிகளின் நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், அது குறித்து விசாரணை கோரியும்" வெளியான சில செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், அதில் உண்மைத்தன்மை இல்லை எனவும் இந்திய வேளாண் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
IARI இயக்குநராக செருகுமல்லி சீனிவாச ராவ், சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) ஆளும் குழு உறுப்பினராக உள்ள வேணுகோபால் படரவாடா, ICAR இன் துணை அமைப்பான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IARI) புதிய இயக்குநரை நியமிப்பதில் சில நாட்களுக்கு முன்பு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ICAR-IARI அமைப்பில் நடந்த ஆட்சேர்ப்புகள் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுத்தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.
நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை:
சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்திய வேளாண் அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் IARI இயக்குநர் நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைப்பெறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முழுவிவரம் பின்வருமாறு-
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.ஏ.ஆர்) என்பது மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் கீழ் வேளாண் ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஒரு முதன்மையான அறிவியல் அமைப்பாகும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்திற்கென சொந்தமாக விதிமுறைகள் மற்றும் துணை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மத்திய வேளாண், விவசாயிகள் நல அமைச்சர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்துள்ளது. இத்தகைய செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாக இருப்பது மட்டுமின்றி, தவறாக வழிநடத்துவதாகவும் ஆராய்ச்சி குழுமம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நியமனங்களும் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மாதிரித் தகுதிகளின் அடிப்படைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நியமனத் தகுதி & விதிகளில் மாற்றமில்லை:
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கான அத்தியாவசிய தகுதிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வு பெற்ற இந்த நிறுவனத்தின் முந்தைய இயக்குநர் (டாக்டர் ஏ.கே.சிங்) தற்போதைய ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட அதே தகுதிகளுடன் 2019-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் எந்தவொரு அறிவியல் நிலைப்பாட்டின்படி அத்தியாவசிய தகுதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கான தற்போதைய விளம்பரத்தில் எந்தவொரு தவறும் இல்லையென்பதால் அவை செல்லாது என்று அறிவிக்கப்படவில்லை. எனவே, ஊடகங்களில் வெளியான செய்திகள் போல் நியமன நடைமுறைகளில் எவ்வித குறைபாடுகளும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடி- தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!
Foot and mouth disease: குமரி & சென்னை மாவட்ட கால்நடை விவசாயிகளின் கவனத்திற்கு
Share your comments