Mango Festival
காரைக்காலில் வெகு விமர்சையாக நடைபெற்ற மாங்கனித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறை உணர்த்தும் விதமாக காரைக்காலில் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கணவர் பரமதத்தர் வீட்டிற்கு அனுப்பிய 2 மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்கு அமுதிட்டு, பின்னர் இறைவன் சிவபெருமானிடம் வேண்டி அதிமதுர மாங்கனியை காரைக்கால் அம்மையார் பெற்றதாக ஐதீகம்.
சுமார் ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வை நம் கண்முன் கொண்டு வரும் இந்த மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி மாங்கனி இறைத்தல். இந்த நிகழ்ச்சி இன்று காரைக்காலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த மாங்கனித் திருவிழா கடந்த 11 ஆம் தேதி இரவு அனுக்ஜை விக்னேஸ்வர பூஜை, மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை பரமசிவன் பிச்சாண்டமூர்த்தியாக எழுந்தருளி பவழக்கால் விமானத்தில் பத்மாசனமர்ந்து வேதபாராயணத்துடன் வாத்தியங்கள் முழங்க வீதியுலா நிகழச்சி நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வதற்காக வீடுகளிலிருந்தும் வீட்டு மாடிகளிலிருந்தும் மாம்பழங்களை வீசி எறிவதும் அம்மாம்பழங்களை கீழே நிற்கும் பக்தர்கள் தாவித்தாவிப் பிடிப்பதும் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. பக்தர்கள் வீசியெறியும் மாம்பழங்களைப் பிடித்து உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த மாங்கனி திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காரைக்காலில் குவிந்தனர். இதனால் காரைக்கால் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ளது.
மேலும் படிக்க:
எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி
சிலிண்டர் விலை 459 ஆக உயர்ந்துள்ளது, இப்போ விலை என்ன தெரியுமா?
Share your comments