தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், தர்மபுரி மாவட்டம் மூலம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் "சிறுதானியங்களில் விதை உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள்" பற்றிய இரண்டு நாட்கள் பயிற்சி மொரப்பூர் வட்டாரம் இருமத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சியில் முனைவர்.மா.அ. வெண்ணிலா, (திட்ட ஒருங்கிணைப்பாளர்) திட்டத்தின் நோக்கம், விதை உற்பத்தி, சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
திட்டத்தின் நோக்கம் என்ன?
திட்டத்தின் நோக்கம் குறித்து முனைவர்.மா.அ.வெண்ணிலா தெரிவித்த விவரங்கள் பின்வருமாறு: ”தர்மபுரி மாவட்டத்தில் 65,000 ஹெக்டர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி நடைப்பெற்று வருகிறது. இருந்தப்போதிலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் புதிய சிறுதானிய இரகங்கள் குறித்த விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் இன்னும் குறைவாகவே உள்ளது. அதுவுமில்லாமல் விவசாயிகளுக்கு தேவைப்படும் நேரத்தில் விதை கிடைப்பதிலும் பிரச்சினை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம் தர்மபுரி மாவட்டம் மூலமாக சிறுதானியங்களில் புதிய இரகங்களின் சாகுபடியை அதிகரிக்கும் திட்டமானது நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
சிறுதானியங்களில் உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்கள் குறித்தும், உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள் மூலம் விழிப்புணர்வு வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் வாயிலாக 200 விவசாயிகளின் வயல்களில் செயல்விளக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன் ஒருபகுதியாக விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், உயிர் உரங்கள் போன்ற இடுப்பொருட்களை விலையின்றி விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். சாகுபடியினைப் போன்றே சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி & செயல்விளக்கங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.
பயிற்சியின் மற்ற விவரங்கள்:
முனைவர்.மா.அ. வெண்ணிலா, (திட்ட ஒருங்கிணைப்பாளர்) அவர்களைத் தொடர்ந்து முனைவர்.மா. சங்கீதா, இணை பேராசிரியர் (மண்ணியல்) சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள், மண் பரிசோதனை, உரப்பரிந்துரைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். முனைவர்.மா.தெய்வமணி, உதவி பேராசிரியர் (நோயியல்) சிறுதானியங்களில் பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். முனைவர்.க. இந்துமதி, இணை பேராசிரியர் (தோட்டக்கலை), மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த பயிற்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய நபார்டு வங்கியின் வளர்ச்சி மேலாண்மை, சோமசுந்தரம் (உதவி பொது மேலாளர்) நபார்டு வங்கியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். (மாவட்ட வளர்ச்சி மேலாளர்,தருமபுரி) ஷிபா சங்கீதா மற்றும் (மாவட்ட வளர்ச்சி மேலாளர் நாமக்கல்) நர்மதா சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இந்த பயிற்சியில் தினை, வரகு, சாமை போன்றவற்றிலுள்ள புதிய இரகங்கள் குறித்தும், அவற்றின் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானியங்கள் பெருமளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் மொரப்பூர், தர்மபுரி,நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் அரூர் உட்பட 6 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 200 விவசாயிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியின் நிறைவாக சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர். சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடிக்கான செயல்விளக்கத் திட்டத்தில் இணைய விருப்பமுள்ள விவசாயிகள் தர்மபுரி மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தினை தொடர்புக்கொள்ளலாம்.
Read more:
கோமாரி நோய்க்கான தடுப்பூசி: கால்நடை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்
நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண்
Share your comments