
பொன்னேரி அடுத்த மெதுாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகளுக்கு தேவையான உரம், யூரியா உள்ளிட்டவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இயற்கை விவசாயத்திற்கு உதவும் வகையில், எண்ணெய் எடுக்காத வேப்பம் புண்ணாக்கு தயாரித்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்காக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள கிடங்கில், பிரத்யோக இயந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இருந்து வேப்பம் கொட்டைகள் மொத்தமாக வாங்கி வந்து, அதை பதப்படுத்தி அதில் எண்ணெய்பு எடுக்காமல் புண்ணாக்கு தயாரிக்கப்படுகிறது. இதுவரை, 31,680 கிலோ வேப்பம் கொட்டைகள் வாங்கி, புண்ணாக்கு உற்பத்தி செய்து, ஒரு கிலோ 50 ரூபாய் என, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், பெரியபாளையம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். இதுவரை, 25,360 கிலோ விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்திலேயே இங்கு மட்டுமே விவசாயத்திற்கு உதவும் வகையில், வேப்பம் புண்ணாக்கு தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய முயற்சி விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் சசிகுமார் கூறியதாவது:
வேப்பம் புண்ணாக்கு, 100 சதவீதம் இயற்கையானது. நெற்பயிர்கள் மற்றும் செடிகளை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். மகசூலை அதிகரிக்க செய்யும். ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்கலாம்.
இதில் ஓரளவிற்கு லாபம் கிடைக்கிறது. அதேசமயம், விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. பொதுமக்கள் கிராமங்களில் கிடைக்கும் வேப்பம் கொட்டைகளை சேகரித்து கொடுத்தால், அவற்றை ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Read more:
இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
Share your comments