1. செய்திகள்

3 ஆண்டுகளுக்கு இலவச பயிர் காப்பீடு- அரசு அதிரடி அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Odisha govt provide free crop insurance to farmers for next 3 years

ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலவச பயிர்க் காப்பீட்டுத் தொகையினை மாநில அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துறை ரீதியான ஆய்வில் ஈடுபட்டார். இதன் பின்னர் திங்களன்று புவனேஸ்வரில் செய்தியாளர் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சர் அதானு சப்யசாசி நாயக் இலவச பயிர் காப்பீட்டுத் தொகையினை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி 2023 காரீஃப் பருவம் முதல் 2025-26 ராபி பருவம் வரையில் விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டின் பிரீமியத்தை அரசே ஏற்கும் என்று அமைச்சர் கூறினார். நாட்டிலேயே விவசாயிகளுக்கு இலவச பயிர்க் காப்பீடு வழங்கும் முதல் மாநிலம் என்கிற பெயரை பெற்றுள்ளது ஒடிசா.

மாநில அரசு விவசாயிகளுக்கு மூன்றடுக்கு முறையின் கீழ் குறுகிய கால விவசாய கடன்களை வழங்கி வருகிறது. ஒடிசா மாநில கூட்டுறவு வங்கி, 17 மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் சுமார் 2,710 முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (Primary Agricultural Credit Societies- PACS) மூலம் எளிதான தவணைகளில் திருப்பி அளிக்கும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

காரீஃப்- 2022 இன் போது, 18.02 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.8710.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ராபி காலத்தில் 16.55 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7972.79 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, வட்டியில்லா கடன் வரம்பை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அரசு உயர்த்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2022-23 நிதியாண்டில், 7 லட்சத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 16,683.57 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1451 புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் (பிஏசிஎஸ்) குறுகிய காலக் கடன்களை வழங்குவதை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக இயங்கி வருகின்றன. விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்களை வழங்குவதில் PACS முக்கியப் பங்காற்றி வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  இந்த செய்தியாளர் சந்திப்பில் முதன்மை செயலாளர் சஞ்சீவ் குமார் சதா ஆகியோரும் உடனிருந்தார்.

e-NAM போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்டுள்ள FPO-களின் எண்ணிக்கையில் 30 மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் ஒடிசா முதலிடத்திலும், மண்டி இடையேயான வர்த்தக மதிப்பின் அடிப்படையில் 4வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும் காலநிலை மற்றும் அதிகரித்து வரும் வெப்ப நிலையால் பெருமளவில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் காண்க:

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி- அவரின் பொறுப்பு என்ன?

English Summary: Odisha govt provide free crop insurance to farmers for next 3 years Published on: 24 May 2023, 11:12 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.