கிருமி நாசினியாக செயல்படும் நாட்டு மாட்டு சாணத்தில் பல்வேறு வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வருமானம் ஈட்ட முடியும். விவசாய உபயோகப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் தயாரிக்கலாம்.
அந்த வகையில் பூஜை பொருட்கள் என்றால் அனைவராலும் மனமகிழ்ந்து பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக திகழும் பஞ்சகாவ்யா விளக்கு தயாரிப்பு தொழில் முனைவோர்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கக்கூடும் என தேனி மாவட்டத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தை சேர்ந்த மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் ம.இரம்யாசிவசெல்வி, வெற்றியாளர்களின் கதைகளுடன் சில தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
பஞ்சகாவ்யா விளக்கு தயாரிப்பு:
குஜராத்திலுள்ள அடிமட்ட கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் தேசிய புத்தாக்க அறக்கட்டளை (அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை) மூலமாக மாட்டு சாணத்திலிருந்து பஞ்சகாவ்யா விளக்கு தயாரிக்கும் இயந்திரத்தை மத்திய பிரதேசம் மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தை சார்ந்த ரோஸன்லால் விஸ்வகர்மா கண்டுபிடித்துள்ளார். அந்த இயந்திரத்தை பயன்படுத்தி வெவ்வேறு வடிவத்தில் பஞ்சகாவ்யா விளக்கு தயாரிக்கலாம். இயந்திரத்தின் விலை ரூபாய் 7000/-
தேனி மாவட்டம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக முன்னிலை செயல் விளக்கத் திட்டத்தின் கீழ் சாணத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. விவசாய பெண்கள், கால்நடை வளர்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வெற்றிக்கதை:
தேனி மாவட்டம், கம்பம் வட்டாரம், கோவிந்தன்பட்டி கிராமத்தை சார்ந்தவர்,திருமதி.கு.சித்ரபிரியா (33), முதுகலை பட்டதாரி.
விவசாயம் நிலம் இல்லை என்றப்போதிலும் சுய தொழில் தொடங்கவேண்டும் என்பது இவரது நெடுநாள் எண்ணம். கடந்த வருடம் உறவினர் மூலமாக வேளாண் அறிவியல் மையம் செயல்பாடுகள் அறிந்து மையத்தை தொடர்பு கொண்டார். பின்பு பயிற்சிகள், மற்றும் பஞ்சகாவ்ய விளக்கு தயாரிக்கும் இயந்திரம் வாங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான சான்றிதழ்கள் பெறுவதற்கான முறைகள் என அனைத்து விதமான ஆதரவுகளும் வேளாண் அறிவியல் மையத்தின் மூலமாக வழங்கப்பட்டன. தற்போது அவர் யோகம் என்ற பெயரில் பஞ்சகாவ்யா விளக்கு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
மேலும் அரசுத்துறை சார்ந்து நடத்தப்படும் நிறுவனங்களில் பயிற்சியாளராகவும் விளங்குகிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
கட்டுரை பொறுப்பு மற்றும் கட்டுரை தொடர்பான விளக்கங்களுக்கு: 1ம.இரம்யாசிவசெல்வி, மனையியல் தொழில்நுட்ப வல்லுநர்., முனைவர் பார்த்குமார் பி தவே, தேசிய புத்தாக்க அறக்கட்டளை – இந்தியா., 1பொ.மகேஸ்வரன், திட்ட ஒருங்கிணைப்பாளர்.,1சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி மாவட்டம், கைபேசி எண்: 95788 84432
Read more:
எண்ணெய் பனை சாகுபடி: விவசாயிகளை ஊக்குவிக்க மானியம் வழங்கும் தோட்டக்கலைத்துறை
நெருங்கும் இறுதி தேதி- பயிர் காப்பீட்டினை விவசாயிகள் மேற்கொள்ள அரசு புது முன்னெடுப்பு!
Share your comments