Rise in petrol and diesel prices
பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயர்ந்து வருவதால், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி, பெட்ரோல் லிட்டருக்கு மேலும் இரண்டு ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்குமாறு, தமிழக அரசுக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை (Petrol Diesel Price)
சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும்; டீசல் லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, 2021 ஆக., 13ல், பெட்ரோல் மீதான வரியை, மூன்று ரூபாய் குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைந்தது.மத்திய அரசும், 2021 நவம்பர் 3ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகளவில் குறைந்தது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைந்தது.
அதை பின்பற்றி, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை, அம்மாநில அரசுகள் குறைத்தன. இதனால், ஒட்டுமொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு, 10 ரூபாய் வரையும்; டீசல் விலை, 17 ரூபாய் வரையும் குறைந்தன. இரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 107 ரூபாயையும்; டீசல், 97 ரூபாயையும் தாண்டியுள்ளது. இது, வாகன ஓட்டிகளுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், 'பெட்ரோல் விலை தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. எனவே, தி.மு.க., வாக்குறுதி அளித்தபடி, பெட்ரோல் விலையை மேலும் இரண்டு ரூபாய் குறைக்க வேண்டும். டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்க வேண்டும்' என்றனர்.
மேலும் படிக்க
ரூ.106ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு!
உரிய காரணமின்றி இரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறை!
Share your comments