
கோவை புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, சில மாதங்களுக்கு முன்பு காட்டு பன்றிகளை அழிக்க சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அதில், வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ.,க்குள் காட்டுப்பன்றி இருந்தால், அதனை பிடித்து மீண்டும் காட்டுக்குள் பத்திரமாக விடப்படும் என்றும், வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ., க்கு மேல் வரும் காட்டுப்பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும் எனவும், அறிவித்தது. அறிவிப்பு செய்து பல நாட்கள் ஆகியும், இதுவரை திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில், காரமடை வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் காட்டுப்பன்றிகள் தாக்கி மூன்று பேர், சின்னதடாகம் பகுதியில் இருவர் என காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து அழித்து செல்கின்றன. இரவு நேரங்களில், காட்டுப் பன்றிகள் கூட்டமாக தோட்டங்களில் இருப்பதை அறிந்தாலும், விவசாயிகளால் அதை சென்று துரத்த முடிவதில்லை. காரணம், காட்டுப்பன்றிகள் தாக்கினால், விவசாயிகளின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இந்த அச்சத்தால், இரவு நேரங்களில் விவசாயிகள் தோட்டங்களுக்குள் செல்வதில்லை. இதனால், வேளாண் பயிர்களை காட்டுப் பன்றிகள் அதிகளவு சேதப்படுத்தி வருகின்றன' என்றனர்.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் குறித்து கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், அன்னுார் உள்ளிட்ட தாலுகாக்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கொண்ட கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வனப்பகுதியில் இருந்து, 3 கி.மீ.,க்கு அப்பால் வரும் காட்டு பன்றிகளை மட்டுமே சுட முடியும் என்பதால், குறிப்பிட்ட கமிட்டியின் பரிந்துரை மற்றும் அப்பகுதியில் காட்டு பன்றிகளால் ஏற்பட்ட சேதம் ஆகியவை குறித்து நேரடியாக ஆய்வு நடத்தி, அந்தந்த பகுதி வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காட்டுப் பன்றிகளை சுட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
Read more:
இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?
Share your comments