
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று 5 ஆவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
கடந்த நான்காண்டுகளில் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி உயிர் விளைச்சல் தரக்கூடிய ரகங்களில் சான்று விதைகள் 39 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம், வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உயிர் விலை பொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீட்டு பரிசோதனை கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் உள்ளிட்டவையும் அறிவிப்பு. உயிர்மெய் விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று உழவர்களுக்கு நம்மாழ்வார் விருது இதற்காக ரூபாய் 6 லட்சம் வரை ஒதுக்கீடு. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூபாய் 841 கோடியில் பயிர் காப்பீட்டு திட்டம்.
விதை சுத்திகரிப்பு நிலையங்கள்:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் மூவாயிரம் மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டு கொள்முதல் செய்ய 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூபாய் 15.05 கோடியில் நிறுவப்படும் என்றும் உழவர்களின் நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து ரூபாய் 250 கோடியில் விதைகள் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யபட்டுள்ளது.
அதோடு நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய ரூபாய் 160 கோடி மதிப்பீட்டு நெல் சிறப்பு தொகுப்பு திட்டம், மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்த ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு, சிறுதானிய பயிர்களின் பரப்பு உற்பத்தி திறனை அதிகரிக்க ரூபாய் 52.44 கோடியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
காவிரி வெண்ணாறு வடிநிலப் பகுதிகளிலும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும் உள்ள சி டி பிரிவு வாய்க்கால்கள் ரூபாய் 13.80 கோடி மதிப்பீட்டில் 2925 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்படும். என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு உழவர்களின் பொருளாதார சுமையினை குறைக்க ரூபாய் 21 கோடியில் திட்டம். நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவை உள்ள பயிர்களின் சாகுபடி ஊக்குவிக்க ரூபாய் 12.50 கோடியில் மாற்றுப் பயிர் சாகுபடி திட்டம். விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் பம்பு செட்டுகள் வழங்கப்படும் உள்ளிட்டவை கவனம் பெற்றுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு சாகுபடி மேம்பாட்டு திட்டம்.
மேலும் கரும்பு உற்பத்தியில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது விவசாயிகளுக்கு டன் ஒன்று ரூபாய் 215 ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 297 கோடியில் கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை 10.62 கோடி மதிப்பீட்டில் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம். நூறு முன்னோடி உழவர்களை நெல் உற்பத்தி திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான் சீனா வியட்நாம் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு.
17,000 விவசாயிகளுக்கு ரூபாய் 215.80 கோடியில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் சிறு, குறு விவசாயிகளின் பயனுக்காக ரூபாய் 10.50 கோடியில் 13 வேளாண் இயந்திர வாடகை மையங்கள், ரூபாய் 17.37 கோடியில் இ வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உரையில் குறிபிட்டார்.
Read more:
உழவர் சந்தைகளை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்
ரூபாய் எட்டு கோடி நிதி ஒதுக்கீட்டில் 50 உழவர் சந்தைகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்கு எடுத்துச் சென்று வழங்கிட 20 உழவர் சந்தைகளை உள்ளூர் இணைய வர்த்தக தளத்துடன் இணைத்தல் குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
எதிர்கட்சிகள் விமர்சனம்:
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேளாண் பட்ஜெட் குறித்து 'X' வலைதளத்தில் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
அவியல், கூட்டு பட்ஜெட்:
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, பிற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"திமுக அரசு ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக தாக்கல் செய்த ஒரு வேளாண் பட்ஜெட்டை போன்று, இந்த ஆண்டும் ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
தமிழக விவசாயிகளின் நலனை காப்பதற்காக ஆண்டுதோறும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்கிறோம் என்ற பெயரில், வேளாண்துறை சார்ந்த ஊரக வளர்ச்சித்துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை வளர்ச்சித்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, தொழில்துறை, நீர்வளத்துறை என பல துறைகளை ஒன்றாக இணைத்து ஒரு அவியல், கூட்டு போல் வேளாண்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்று கூறினார்.
Read more:
Share your comments