
முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ள எம்புரான் சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ், தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் உருவபடங்களை காலணிகளால் அடித்து தமிழக விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தின் 2-ம் பாகம் எம்புரான் லூசிஃபர் பார்ட்-2 ஆக திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்துத்துவா கட்சிகளுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து தற்போது எம்புரான் திரைப்படத்தில் 21 இடங்களில் காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன
இது ஒருபுறம் இருக்க, முல்லைப் பெரியாறு அணக்கு எதிரான விஷம பிரசாரங்களும் எம்புரான் திரைப்படத்தில் மறைமுகமாக இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எம்புரான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; தமிழ்நாட்டில் எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எம்புரான் சினிமாவுக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், எம்புரான் திரைப்படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது நடிகர்கள் மோகன்லால், பிருத்விரா மற்றும் தயாரிப்பாளர் கோபாலன் உருவப் படங்களை காலணிகளால் அடித்தும் கிழித்தும் தங்களது எதிர்ப்பை விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல கம்பத்திலும் இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.
எம்புரான் படத்தின் சர்ச்சை வசனங்கள் என்ன?
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக, திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது என்கிற வசனம் இடம் பெற்றுள்ளது. முல்லை பெரியாறு அணையால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது; இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை,குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும் ஆகிய வசனங்கள் இடம் பெற்றிருப்பதுதான் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு காரணம்.
Read more:
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்
Share your comments