ADMK Next leader
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் என முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா போல் இனி அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வெடிக்கத் துவங்கி உள்ளது.
சென்னையில் நேற்று நான்கரை மணி நேரம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பற்ற வைத்தார்.
ஒற்றை தலைமை விவகாரம்
இதனை தொடர்ந்து நேற்று பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அதில் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், நெல்லை மற்றும் தேனி மாவட்ட செயலாளர்கள், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுகவில் பரபரப்பு
கடந்த காலங்களில் சசிகலா ஆதரவாளராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறினார் தற்போது வரை அங்கேயே தொடரும் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஜெயலலிதா ஊழல் செய்த பணத்தை சசிகலா கொள்ளையடித்தார், மருத்துவமனையில் இருக்கும் போது ஜெயலலிதா ஸ்வீட் சாப்பிட்டார், எங்களைப் பார்த்து கையசைத்தார் என்பன குறித்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்து, பின்னர் பின் வாங்கியவர் திண்டுக்கல் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments