Credit : Dinamalar
100 வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியேச் சவக்குழிகளை வெட்டி வைக்கும் அவலம் சென்னையில் நடந்திருக்கிறது. இதனால், அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள் தோண்டப்படுகிறதோ என சந்தேகம் எழுந்தது.
மரணம் (Death)
மண்ணுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.அது எப்போது, எப்படி வரும் என்பதுதான் சூட்சமம். இதற்கு இடைப்பட்ட வாழ்வில் மனிதர்கள் ஆடும் ஆட்டம்தான் அவர்களைத் தவறாமல் தங்கள் குழிகளை நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதுதான் உண்மை.
இதற்கு அச்சாரம் போட்டதுபோல, சென்னையை அடுத்த சோழவரம் ஊராட்சியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
சுடுகாடு (Grave)
சென்னை அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம், ஜெகன்னாதபுரம் ஊராட்சி அகரம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றங்கரையை ஒட்டி இடுகாடு உள்ளது.
இந்த இடுகாட்டை, சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
திடீர் புதைகுழிகள்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு, 4 அடி நீளம் 2 அடி அகலம் கொண்ட, 50க்கும் மேற்பட்ட புதைகுழிகள் வெட்டப்பட்டன.இதனால், ஒரே நேரத்தில் இத்தனை குழிகளா, யார், எப்படி இறந்திருப்பார்கள் என, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
ஆனால் அவற்றில் ஓரிரு குழிகளில், சடலங்கள் புதைக்கப்பட்டது போல், மண் குவித்து மூடப்பட்டிருந்தது. இதனால், அட்வான்ஸ் புக்கிங்கில் புதைகுழிகள் வெட்டப்பட்டு, அதில் சடலம் புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
மதுபாட்டில்களுக்கு சமாதி
அத்துடன், சம்பவ இடத்தில், ஏராளமான மதுபாட்டில்களும் இருந்தன. இது குறித்து, அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது, கடந்த மாதம், நுாறு நாள் வேலை திட்டத்தின் மூலம், இந்த குழிகள் வெட்டப்பட்டது தெரிய வந்தது.
இந்த புதிய புதைகுழிகள், 'பகீர்' உணர்வை ஏற்படுத்தி உள்ளன. அத்துடன், 100 நாள் வேலைத் திட்டத்தை, இடுகாட்டில் புதைகுழி வெட்டவா பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
100 நாள் வேலை
மாவட்ட நிர்வாகம், இதுபோன்ற பணிகளை நேரில் ஆய்வு செய்து, நுாறு நாள் வேலைத் திட்டத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில் நீர்நிலை பாதுகாப்பு, மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
அவ்வாறு செய்வதன் மூலம் மக்களிடையே ஏற்படும் சந்தேகங்கள், தேவையற்ற அச்சம் உள்ளிட்டவை வெற்றிகரமாகத் தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க...
Share your comments