கரூர் மாவட்டத்தினை சேர்ந்த அன்னை தெரசா, தன்னிடம் விவசாய நிலங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பதன் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.36,500/- வருமானம் பெறுகிறார். மேலும் 3 சுய உதவிக்குழு பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். இவரது வெற்றிக்கதையினை முனைவர் பெ.தமிழ்செல்வி கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்து பல்வேறு பயிற்சிகள், விரிவாக்க செயல்பாடுகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பண்ணை மகளிர்களுக்கு பயிற்சி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (போதாவூர், திருச்சி), வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை மற்றும் திருச்சி, தொழில் முனைவோர்களுக்கான மையம், குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தப்படும் மையத்திற்கு கண்டுனர் பயணமாக பண்ணை மகளிர்களை அழைத்து சென்றுள்ளனர்.
வறுமையினை போக்க சுய தொழிலே வழி:
அன்னை தெரசா, வடசேரி கிராமம் தோகைமலை வட்டம் கரூர் மாவட்டத்தை சார்ந்தவர். 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சொந்தமாக இவருக்கு விவசாய நிலம் எதுவும் இல்லை. 2 பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏதாவது சுய தொழில் செய்து, வறுமையை போக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது, புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு, வேளாண் சார்ந்த சுய தொழில்களை கற்று கொள்ள வேளாண் அறிவியல் மையத்தை அணுகினார். இவருக்கு வீட்டில் இருந்தபடியே தொழில் துவங்குவதற்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேலும், வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் நடைபெற்ற முதல் நிலை செயல் விளக்க திடல், வேளாண் பொருட்களில் மதிப்புக்கூட்டுதல் என்ற தலைப்பில் வாரம் ஒரு நாள் என 8 வாரங்கள் நடைபெற்ற உழவர் வயல் வெளி பள்ளி, கண்டுனர் பயணம், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் செயல் முறை விளக்கங்களில் தொடர்ந்து கலந்து கொண்டதன் பயனாக சிறு தானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்து ஆர்வம் ஏற்பட்டு, இன்று தொழில் முனைவோராக உருவாகி உள்ளார்.
வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் ஆதி திராவிடர்களுக்குக்கான நலத்திட்டத்தின் கீழ் 2 மாவு அரைக்கும் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் இருந்து பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும், உணவு தரகட்டுப்பாடு சான்றிதழ், பாக்கெட் போடும் கருவி, பாக்கெட்டுகள் சீல் செய்யும் இயந்திரம் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்:
வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள 2 சிறிய மாவு அரைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி சத்துமாவு, பலதானிய லட்டு, கம்பு லட்டு, கேழ்வரகு லட்டு, திணை லட்டு, பாசிப்பயறு லட்டு, நிலக்கடலை லட்டு, எள் லட்டு, கலவை சாதப்பொடி வாழைக்காய் மாவு புட்டு மாவு, மசாலா பொடிகள் (சாம்பார் பொடி, மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி) போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்துவருகிறார். எவ்விதமான இரசாயனங்கள் செயற்கை நிற மூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்களை சேர்க்காமல், தரமான முறையில், சுத்தமாகவும், சுவையாகவும், உணவு பொருட்களை தயாரித்து, "நல்ல அமுது" என்ற பெயரில் மக்களிடம் விற்பனை செய்து வருகிறார்.
Read also: நிழல்வலைக்கூடத்தில் CO 18009 புன்னகை கரும்பு இரக நாற்று உற்பத்தி- 50% மானியம்!
ஒண்டி வீரன் கோவில் என்ற பெயரில் சுய உதவி குழு ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வெற்றியை பார்த்து, பிற குழு உறுப்பினர்களும் இவருடன் சேர்ந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்க துவங்கியுள்ளனர்.
வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் ஆலோசனை குழு கூட்டத்தில் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Read more:
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
20 சதவீத ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு- விவசாயிகளுக்காக தேதி நீட்டிப்பு!
Share your comments