நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பகுதியை சேர்ந்த கென்னடி கிருஷ்ணன், வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனையில் 40 ஆண்டுகள் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றப்பின் தற்போது முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் ICAR ஆதரவில் நடைப்பெற்ற MFOI நிகழ்வில் 2024 ஆம் ஆண்டுக்கான மில்லினியர் விவசாயி விருதினையும் கென்னடி கிருஷ்ணன் வென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அவருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்க்காணலின் விவரம் பின்வருமாறு-
கே: மருந்தாளுநராக பணிப்புரிந்து ஓய்வுப் பெற்ற பின் தான் விவசாயத்தில் இறங்கியுள்ளீர்களா?
பதில்: “அப்படியெல்லாம் இல்ல. தாத்தா, அப்பா எல்லாம் அவர்கள் காலத்தில் விவசாயம் செஞ்சுட்டு தான் இருந்தாங்க. அவர்களைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டே விவசாயத்தில் நான் விவசாய பணியாளர்களுடன் இறங்கிட்டேன். அப்போதெல்லாம் வாரத்திற்கு ஒருமுறை விளைநிலங்களை பார்வையிட்டு விவசாய பணியில் ஈடுபட்டிருந்தேன். ஓய்வுக்கு பின் முழுமையாக விவசாயத்தில் இயங்கி வருகிறேன்”
கே: எவ்வளவு ஏக்கரில் விவசாயம் பண்றீங்க? என்ன மாதிரியான பயிரெல்லாம் பயிரிட்டு வாறீங்க?
பதில்: ”கிட்டத்தட்ட 15 ஏக்கரில் விவசாயம் பண்றோம். அதில் 6 ஏக்கர் தேயிலை, 3 ஏக்கர் அளவில் காபி, 2 ஏக்கரில் தைம், ரோஸ்மேரி, லெமன் கிராஸ், புதினா .. அப்புறம் மீதமுள்ள பகுதிகளில் பப்பாளி, அவகோடா, எலுமிச்சை போன்ற பழங்களும் பீட்ரூட், தக்காளி, கேரட், கீரை உட்பட சில காய்கறி வகைகளையும் பயிரிட்டு வருகிறேன். அத்தனை பயிர்களையும் மாட்டுச்சாணம், மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்தி முழுமையாக இயற்கை விவசாய முறையில் தான் விளைவித்து வருகிறேன். இதுப்போக, சுக்கு- ஏலக்காய்- நறுமணத்தில் காபி பவுடர் வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.இதுல நாங்க சிக்கரி பயன்படுத்துவது கிடையாது”
கே: இயற்கை விவசாயத்தில் மகசூலும், லாபமும் தொடர்ந்து கிடைக்கிறதா? மார்க்கெட்டிங்க் எப்படி பண்றீங்க?
பதில்: “ இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்தால் மகசூல் பார்ப்பது கடினம்..அது இதுனு சொல்றது எல்லாம் ஒரு Myth தான்! ஆரம்பத்தில் மகசூல் கிடைக்கிறது குறைவாக இருக்கலாம், ஆனால் போக போக எதிர்ப்பார்க்கிற மகசூல் நிச்சயம் கிடைக்கும். சிலர் மகசூல் குறைஞ்சா, கிடைக்கிற வருமானமும் குறையுமேனு இயற்கை விவசாயத்தில் இறங்க தயங்குறாங்க.. அதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. இப்ப உதாரணத்திற்கு நீங்க மருந்து எல்லாம் தெளிச்சு விளைவிக்கிற கேரட்டை கிலோவுக்கு ரூ.50-னு விற்கிறீங்கனா.. இயற்கை முறையில் விளைவித்த கேரட்டை ரூ.80- வரை நான் விற்கிறேன். அதை வாங்குறதுக்கும் இங்க ஆள் இருக்காங்க. கூடுதல் விலைக்கு போகும் போது அது மகசூல் இழப்பை ஈடு செய்யுற வகையில் தான் இருக்கிறது”
”நான் விளைவிக்கிற காய்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குகிறேன். இதுப்போக ஈஷா போன்ற அமைப்புகளும் நேரடியாக எங்களிடம் கொள்முதல் பண்றாங்க. நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பான THOFA ஏற்பாடு செய்கிற வாரச்சந்தை மூலமும் என் விளைப்பொருட்களை விற்பனை பண்றேன்.”
கே: அரசாங்கம் இந்த விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.. அப்படினு விவசாயியாக உங்களுக்கு ஏதாவது கோரிக்கை இருக்கா?
பதில்: “குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிச்சயம் தேயிலை விவகாரத்தை சொல்லலாம். நீலகிரி மாவட்டத்தில் பிரதான பயிர்களில் ஒன்று தேயிலை தான். அதற்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் விளை நிலங்களை விற்றுவிட்டு விவசாயத்தை கைவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 1 கிலோவுக்கான தேயிலை உற்பத்திச் செலவு ரூ.22.50 பைசா. ஆனால், எங்களுக்கு கிடைப்பது என்னமோ ரூ.15 தான். இதிலேயே எங்களுக்கு கிட்டத்தட்ட 7 ரூபாய் 50 பைசா நஷ்டம் ஆகுது.”
“ தேயிலை விவகாரத்தில் 65:35 என்கிற ஒரு கணக்கு இருக்கு. 1 கிலோ டீ-க்கு 4 கிலோ தேயிலை வேணும். அந்த வகையில் 1 கிலோ தேயிலைக்கு தோரயமாக ரூ.16 மற்றும் மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்த குறைந்தப் பட்ச ஆதார விலைக்கான கொள்கை (உற்பத்திச்செலவில் 50% சேர்த்து) எனப் பார்த்தால் ஒரு கிலோ தேயிலைக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை 24 ரூபாயாவது இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களுக்கு வாழ்வாதாரத்தை நிலைநாட்ட குறைந்தது கிலோவிற்கு ரூ.40 என்கிற விலை கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்.”
“ 20 வருடமாக நியாயமான விலை கிடைக்க போராடி வருகிறோம். நெலிகோலு அறக்கட்டளையில் நானும் ஒரு உறுப்பினராக அங்கம் வகிக்கிறேன். எங்களது அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் வரை போய் விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டது. அதனை நடைமுறைப்படுத்தாமல் ஏதேதோ காரணங்களை சொல்லி காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தணும்.”
Read also: OTP காய்களின் விலை ஏன் கட்டுக்குள்ளே இருக்கு? மில்லினியர் விவசாயி சிவதேவன் நேர்காணல்
”மேலும் என்னை கேட்டால், விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்ய முயல்வதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள வாடிக்கையாளார்களை கவர்ந்தாலே போதும். அதுவும் நிலையான வருமானத்தை பார்க்க வழிவகுக்கும் என்று தான் சொல்வேன் “ என்றார் கென்னடி கிருஷ்ணன்.
பல வகை பயிர்களை இயற்கை விவசாய முறையில் பயிரிட்டு அசத்தி வரும் கென்னடி கிருஷ்ணன், தன்னுடய பகுதிகளில் 4000 மரங்களை நட்டு குறுங்காடு உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் அடுத்தாண்டு தொடக்கத்தில் ஒருங்கிணைந்த பண்ணை முறையில் கால்நடை மற்றும் மீன் வளர்ப்புடன் விவசாய பணிகளில் ஈடுபட போவதாக தன் எதிர்க்காலத் திட்டத்தினையும் நம்முடன் பகிர்ந்துள்ளார்.
Read more:
விவசாயிகளே.. வாழைத் தார்களை இப்படி பராமரித்தால் லாபம் நிச்சயம்!
Coriander cultivation: கொத்தமல்லி சாகுபடி தொழில்நுட்பமும் அறுவடை முறையும்
Share your comments