தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கர அள்ளி கிராமப்பகுதியினை சேர்ந்த பாரம்பரிய நெல் விதை காப்பாளரும், இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியாளருமான S.P.சஞ்சய் பெருமாளுடன், பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்க களமிறங்கியது ஏன்? என்பதை குறித்து தெரிந்துக் கொள்ள கலந்துரையாடியது கிரிஷிஜாக்ரன் ஊடகக் குழு.
58-வயதாகும் சஞ்சய் பெருமாள், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில் சில்லாரா அள்ளி பகுதியில் விதை சேகரிப்பு அங்காடி ஒன்றினையும் வைத்துள்ளார். இதுத்தொடர்பாக அவரிடம் மேற்கொண்ட நேர்க்காணலின் விவரம் பின்வருமாறு-
எப்போது தொடங்கியது விதை சேகரிப்பு பயணம்?
” வணக்கம் ஐயா, நான் 2006 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவ குணம் வாய்ந்த பாரம்பரிய நெல்லினை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டுமென என்கிற நோக்கத்துடன் இந்த விதை சேகரிப்பு பயணத்தை தொடங்கினேன்.
ஆரம்ப காலகட்டத்தில் கிச்சடி சம்பா, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, மிளகு சம்பா போன்ற பாரம்பரிய நான்கு நெல் வகைகளை பயிரிட்டு அதன் மூலம் விதைகளை சேகரித்து மற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்து அவர்களையும் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினேன்.
எதிர்ப்பாராதவிதமாக எனது மனைவி இறந்த போது எமது பணியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. அதன்பின் நாளடைவில் பாரம்பரிய நெல் விதை சாகுபடி வேகமெடுத்த நிலையில் 2014-ல் கிட்டத்தட்ட 100 வகையான பாரம்பரிய நெல் இரகங்களை சேகரித்தேன். தொடர் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணங்கள் செய்து கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்களின் விதைகளை சேகரித்துள்ளேன்.”
”என்னுடைய நோக்கமே பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு உருவாக்கம் செய்வது தான்.நஞ்சு இல்லா உணவை வழங்க இந்த இளைய தலைமுறையினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.” என்றார்.
அரசின் சார்பில் கிடைத்த வெகுமதி என்ன?
பதில்: ”அரசு அந்த உதவிகள் செய்யும், இந்த உதவிகள் செய்யும்.. என்று எதையும் எதிர்ப்பார்த்து நான் செய்யவில்லை. எவ்வித துணை எதுவுமில்லாமல் நானாகவே தனித்து அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன்.
ஆட்மா திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட தமிழகத்தின் இன்னும் பிறமாவட்டங்களுக்கும் பயணித்து பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சியினை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறேன். தொடக்கக் காலத்தில் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கிய போது விலையின்றி விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் இரக விதைகளை வழங்கி வந்தேன். அதன் பின்பு விவசாயிகளுக்கு விதைகளை கொடுத்து நம் பாரம்பரிய முறையான (விதை பண்டமாற்று முறையினை) கடைப்பிடித்து வருகிறேன்.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 டன் அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு (விதை பண்டமாற்று முறையில்) விற்பனை செய்து வருகிறேன். எமது பணிகளை கௌரவிக்கும் விதமாக மாவட்டம் மற்றும் மாநில அளவில் அரசிடமிருந்தும், TNAU சார்பிலும் எனக்கு விருது வழங்கியுள்ளார்கள். மேலும் தனியார் அமைப்புகளின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் எனக்கு வழங்கி கௌரவித்து உள்ளார்கள்.
இவைகள் தவிர்த்து தொடர்ந்து அனைத்து விவசாயிகளுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சி வழங்கி வருகிறேன். உதாரணத்திற்கு ஜவ்வாது மலையில் அமைந்திருக்கும் 40 மலை வாழ் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு 3 வருட காலம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வுகளை வழங்கியதோடு, சிறுதானியங்கள் மற்றும் தேன் ஆகியவற்றில் என்ன மாதிரியான மதிப்புக்கூட்டு பொருட்கள் செய்யலாம்? அதனை விற்பனை செய்வது எப்படி? என்பது குறித்து முழுமையாக பயிற்சி வழங்கியுள்ளேன்" என்றார். நேர்க்காணலின் மற்ற பகுதி டிசம்பர் மாத கிரிஷி ஜாக்ரன் மாத இதழில் வெளியாகவுள்ளது.
Read more:
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
Share your comments