மைசூருவில் 65 வயது மூதாட்டியை 85 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் முதியவரின் 9 பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் நடைபெற்றது.
இளமையில் கணவனையும், முதுமையில் மனைவியையும் இழந்தால், வாழ்வே நரகமாக மாறிவிடும் என்று கூறுவார்கள். முதுமையில் வாடும்போது, காலம் நம்மைத் தனிமரமாக மாற்றிவிட்டாலும், துணை ஒன்றைத் தேடிக்கொள்வது மனதிற்கு ஆறுதலையும், கூடுதல் பலத்தையும் கொடுக்கத்தான் செய்கிறது. இதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.
முதுமையில் தனிமை (Loneliness in old age)
கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகரில் வசித்து வருபவர் முஸ்தபா.85 வயதான இவர் இறைச்சிக்கடை உரிமையாளர். இவரது மனைவி குர்ஷித் பேகம். இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.அனைவரும் தனித்தனியாக தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனால் முஸ்தபா, தனது மனைவி குர்ஷித் பேகமுடன் தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் முஸ்தபா தனிமையில் வசித்து வந்தார்.
நட்பு காதலாக மாறியது (Friendship turned into love)
வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தனக்கு ஒரு துணை தேவை என்று உணர்ந்தார். இதையடுத்து அவர் அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த பாத்திமா பேகம் என்ற 65 வயதான மூதாட்டியை சந்தித்தார். இருவரும் நட்பாகப் பழகி, ஒருவரை ஒருவர் நன்குப் புரிந்து கொண்டனர்.
இந்த நிலையில் நட்பு காதலாக உருமாற, உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று பாத்திமா பேகமிடம், முஸ்தபா கூறினார். முதிர்ந்த வயதில் இது தேவைதானா? என்று பலரும் கிண்டல் செய்த நிலையில், முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொண்டார். மேலும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார்.
குடும்பத்தினர் சம்மதம் (Family consent)
இவர்களது திருமணத்திற்கு முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.
மேலும் அவர்களே முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணம் நடத்தி வைத்தனர். கொரோனா பரவல் காரணமாக இவர்களது திருமணம் முஸ்தபாவின் வீட்டில் எளிமையான முறையில் நடைபெற்றது. பின்னர் புதுமண தம்பதியிடம், அனைவரும் ஆசி பெற்றனர். இந்த சம்பவம் அந்த நகரம் முழுவதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் படிக்க...