A Chinese woman who wrote a Tamil book
சீனப் பெண், தன் மதுரை பயணம் குறித்து எழுதிய நுால் வெளியீட்டு விழா, திருநெல்வேலியில் நடந்தது. சீனாவைச் சேர்ந்தவர் ஜாங் கீ, 33; சீனாவின் யுனான் மிஞ்சூ பல்கலையில், தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். தமிழ் மீதான ஆர்வத்தால், தன் பெயரை நிறைமதி என, மாற்றி வைத்து உள்ளார். இவர், மதுரை காமராஜர் பல்கலையில், தமிழியல் துறை நடத்திய அயலக பேராசிரியர்களுக்கான 27 நாள் பயிற்சியில் பங்கேற்றார். அப்போது, மதுரை, திருப்பரங்குன்றம், அழகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், கீழடி உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.
தமிழ் நூல் வெளியீடு (Tamil Book Release)
நிறைமதி, தன் பயணம் குறித்து எழுதிய, 'மலைகள் தாண்டி மதுரைப் பயணத்தில், சீனப் பெண்ணின் பண்பாட்டு தேடல்' நுால் வெளியீட்டு விழா, தமிழ் முழக்கப் பேரவை சார்பில், திருநெல்வேலியில் நடந்தது.
பசிபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், இணைய வழியில் தலைமை வகித்தார். டாக்டர் மகாலிங்கம் அய்யப்பன் நுாலை வெளியிட, பேராசிரியர் கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
நுாலாசிரியர் நிறைமதி தமிழில் பேசுகையில், ''மதுரை பயணமே மகிழ்ச்சியை தந்தது. தமிழர்களின் அன்பையும், விருந்தோம்பலையும் மறக்க இயலாது. மணிமேகலை காப்பியத்தை, மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வின் மூலம் சீன மொழியில் மொழி பெயர்க்கிறேன்,'' என்றார்.
மேலும் படிக்க
தமிழில் திருமணப் பத்திரிகை அச்சடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்!
நடுவானில் பரபரப்பு: பாத்ரூம் என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!