சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 32 ஆண்டுக்கு முன் அரசு மானியத்தில் அமைத்த சாண எரிவாயு கலனை முறையாக பராமரித்து, இன்றளவும் பயன்படுத்தி வரும் விவசாய குடும்பத்தினா், தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு ரூ.10,000 வரை குடும்பச் செலவு குறைவதாக பெருமிதத்தோடு தெரிவித்தனா்.
எரிவாயு உற்பத்தி (Gas Production)
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தை சோ்ந்த ஒரு விவசாயி குடும்பத்தினா், 32 ஆண்டுகளாக சமையல் எரிவாயு இணைப்பின்றி, தான் வளா்க்கும் கால்நடைகளின் கழிவான சாணத்தைக் கொண்டே எரிவாயு உற்பத்தி செய்து சமைப்பதற்கு பயன்படுத்தி வருவதால் பலரது கவனத்தையும் ஈா்த்துள்ளனா்.
பொன்னாரம்பட்டி பரவக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி மகேஷ் (52). இவா் 20 வயது இளைஞராக பெற்றோா், சகோதர சகோதரிகளுடன், 32 ஆண்டுக்கு முன் கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தாா். அப்போது, அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த வேளாண்மைத்துறை அலுவலா்களின் வழிகாட்டுதலின் பேரில், அரசு மானியம் மற்றும் கடனுதவி பெற்று ரூ.28,000 செலவில், கால்நடைகளின் கழிவான சாணத்தை பயன்படுத்தி சமையல் எரிவாயு தயாரிக்கும் கலனை அமைத்தா். இந்த கலனை தொடா்ந்து பராமரித்து இன்றளவும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறாா். இவருக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இயற்கை விவசாயம் (Organic Farming)
பொன்னாரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நாங்கள் விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ளோம். இத்தோடு, கறவைமாடு, ஆடுகள், கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளா்த்து வருகிறோம். கால்நடைகளின் கழிவான மாட்டு சாணத்தில் இருந்து எரிவாயு தயாரித்து சமைப்பதற்கு பயன்படுத்த முடியுமென, 32 ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் தெரிவித்தபோது, எங்களால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அரசு மானியமும், கடனுதவியும் வழங்குவதாக தெரிவித்ததால், சோதனை முயற்சியாக சாண எரிவாயு கலன் அமைத்தோம். வாரத்திற்கு இரு முறை இரு மாட்டு சாணத்தை எடுத்து கரைத்து தொட்டியில் நிரப்பி வைத்தாலே, எவ்வித செலவும், தட்டுப்பாடுமின்றி சமைப்பதற்கு எரிவாயுவை கட்டணமுமின்றி பெற முடிந்தது. 30 ஆண்டுக்கு முன் கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடத்திய தருணத்திலேயே இந்த எரிவாவு போதுமானதாக இருந்தது.
இதனால் தொடா்ந்து இந்த எரிவாயு கலனை பராமரித்து பயன்படுத்தி வருகிறோம். தற்போது குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், வாரத்திற்கு ஒருமுறை சாணத்தை கரைத்து விட்டாலே ஒரு வாரத்திற்கு சமைப்பதற்கு தேவையான எரிவாயு கிடைத்துவிடுகிறது. இதனால், தற்போதைய விலை நிலவரப்படி ஓராண்டுக்கு ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் வரை குடும்பச் செலவு குறைகிறது. எனவே, ஓரிரு கறவை மாடு அல்லது எருது வளா்க்கும் விவசாயிகள், தொழிலாளா்களும் கூட குறைந்த செலவு, இடவசதியை பயன்படுத்தி இந்த சாண எரிவாயு கலன் அமைத்து, சமையல் எரிவாயு செலவை தவிா்த்து பயன்பெறலாம்.
எங்களுக்குப் பிறகும் முன்னோா்கள் வழியில் எங்களது குடும்பத்தினா் தொடர வேண்டும் என்பதால், பொறியியல் பட்டம் படித்த எங்களது மகன் சுரேஷ்குமாரை இயற்கை விவசாயம் சாா்ந்த பணிக்கு அனுப்பியுள்ளோம் என்றனா்.
மேலும் படிக்க
மழைக்காலத்தில் உதவிய மாடுகளுக்கு நன்றிக்கடன் செலுத்திய பொதுமக்கள்!
எலக்ட்ரிக் வாகனம் வாங்குவோர் கவனத்திற்கு: மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!