கோவையில் யோகா மாஸ்டர் ஒருவர், தலைகீழாக நின்றநிலையில், இட்லி சாப்பிட்டது, மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. திருவண்ணாமலை கண்ணமங்கலத்தை 70வயதான இந்த முதியவர், திராட்சை பழங்களையும் சாப்பிட்டதுடன், பாலையும், குடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மற்றவர்களுக்கு ஆரோக்கியத்திற்காக அக்கறை செலுத்தும் நபர்கள் இன்னும் நம்முடன் வசிக்கத்தான் செய்கிறார்கள் என்பதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அப்படியொரு சம்பவம் இங்கு நடந்துள்ளது.
யோகா விழிப்புணர்வு
கோவை வரதராஜபுரம் உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அகஸ்தியர் சன்னதியில் குரு பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் யோகா ஆர்.பழனி என்பவர் யோகாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு யோகாசனம் செய்தவாறு விளக்கம் அளித்தார்.
தலைகீழாக நின்று
அப்போது அகஸ்தியர் சன்னிதானம் முன்பு அவர் தலைகீழாக நின்றவாறு (சிரசாசனம்) இட்லி சாப்பிட முடிவு செய்தார். இதையடுத்து தலைகீழாக நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் திராட்சை பழங்கள் மற்றும் பால் குடித்தார். இதனை அங்கு இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
இதுகுறித்து யோகா மாஸ்டர் பழனி கூறும்போது, நான் ஏராளமான மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறேன். ஒரு மணி நேரத்திற்குள் பல்வேறு யோகாசனங்களை செய்து முடிப்பேன். பொதுமக்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதுபோன்று தலைகீழாக நின்று இட்லி, பழம் மற்றும் பால் அருந்தினேன் என்றார்.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!