கரோனா தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் செயல்படாது இருக்கின்றன. வேளாண்துறைக்கு மட்டும் விலக்கு அளித்ததை அடுத்து அத்துறை சார்ந்த அலுவலக பணிகள் மட்டும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எனினும் விவசாயிகளால் வேளாண் துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல இயலாது என்பதால் தொலைப்பேசி வாயிலாக அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளித்து வருகிறது.
மதுரை தல்லாகுளத்தில் செயல்பட்டு வரும் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்து அதன் மூலம் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. எனவே மதுரை மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாயிகள் 0452-2531136 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெரிவிக்கலாம். அலுவலக வேலை நாட்களான திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு தேவையான உதவியை பெறலாம் என கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.