பொதுவாக குழந்தைகளின் இயல்பு விளையாட்டு மட்டுமே. இரண்டு வயது நிரம்பிய, நடக்க துவங்கிய குழந்தை பொம்மைகளுடன் விளையாட விருப்பப்படும். அதனை உடைத்து குதூகலப்படும். ஆனால் இந்த குழந்தை வித்தியாசமாய் விளையாடி அதனையே சாதனையாக்கி விட்டது. சிவகாசி கவிதா நகரை சேர்ந்த ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் - சத்யா தம்பதியினரின் ஒரு வயது 11 மாதங்கள் மட்டுமே ஆன குழந்தை ஆத்வி குமார்.
இக்குழந்தை ஒரு வயது 7 மாதங்கள் இருந்தபோதே பல்வேறு நாட்டு கொடிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், வாகனங்களின் லோகோக்கள், இடங்களின் பெயர்கள், விலங்குகள், பறவைகள், உணவு பொருட்கள் என பெயர்களை சரியாக கூறியதால் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் பட்டம் (Doctorate)
ஒரு வயது 9 மாதத்தில் பல்வேறு படங்கள் 100, அரசியல் தலைவர்கள் 5 , தேசிய தலைவர்கள் 6 , வாகனங்களின் லோகோ 25, நல்ல பழக்கங்கள் 10, சுதந்திர போராட்ட வீரர்கள் 5, விலங்குகள் 28, பறவைகள் 15 , உணவு பொருட்கள் 30 உள்ளிட்ட பெயர்களை மூன்று நிமிடம் 32 வினாடிகளில் கூறி ஜாக்கி புக் ஆப் டேலன்ட்ஸ் சான்றிதழ் பெற்றுள்ளது. ஒரு வயது 11 மாதத்தில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 'ரெக்கார்ட் பிரேக்கிங்' (Record Breaking) டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாயார் சத்யா கூறியதாவது: இளம் வயதிலேயே வீட்டில் என்ன நிகழ்வு நடந்தாலும் அதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்து திரும்ப கூறுவான். இதனால் எனது குழந்தைக்கு பெயர்களை கூறி பயிற்சி அளித்தேன். நல்ல ஞாபக திறன் கொண்டதால் உடனடியாக அதில் மனதில் பதியவைத்து திரும்ப கூறுவதில் வல்லமை பெற்றான் என்றார். குழந்தையிடம் நீ என்னவாக வர ஆசைப்படுகிறாய் என கேட்டபோது, கலெக்டராக வருவேன் என மழலை குரலில் கூறி சிரிக்கிறார்.
மேலும் படிக்க
இந்த நாட்டில் வாரத்திற்கு நான்கு நாள் தான் வேலையாம்: சூப்பர் அறிவிப்பு!