அரசு பணிக்கான தேர்வில், தாய், மகன் இருவருமே வெற்றி பெற்றிருப்பது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாய், கடந்த 11 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்தவர் ஆவார்.
அரசு பணியின் மீது மக்களுக்கு கொண்டுள்ள நம்பிக்கையும், ஒருவித ஈர்ப்பும் எந்தக் காலத்திலும் குறைவதில்லை. அதனால்தான் லட்சக்கணக்கில் சம்பளத்தை வாரி வாங்க தனியார் நிறுவனங்கள் முன்வரும் காலத்திலும், பென்சன் இல்லை என அரசு கைவிரித்துவிட்ட போதிலும், அரசு பணிக்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பிப்பது வாடிக்கையாக உள்ளது.அப்படி நடந்த அரசு பணிக்கான தேர்வில், தன் மகனுடன், தாயும் உயர் பதவிக்கு தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலைக்குத் தேர்வு
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அரியாகோடு தெற்கு புத்தளத்தைச் சேர்ந்தவர் சந்திரன். கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிந்து அங்கன்வாடி ஊழியர். இவர் தனது மகன் விவேக்குடன் சேர்ந்து அரசுப் பணிக்கான எல்.ஜி.எஸ் தேர்வை எழுதினார். இதில் அவர் 92-வது ரேங்க் பெற்றுள்ளார். அவரது மகன் விவேக் 38-வது ரேங்க் வென்றார். இதன் மூலம் தாய்-மகன் இருவரும் அரசு வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
ஆசை நிறைவேறியது
தான் தேர்வானது குறித்து பிந்து கூறுகையில், கடந்த 11 ஆண்டுகளாக அங்கன்வாடி ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, நல்ல ஊதியத்துடன் கூடிய அரசுப் பணியைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக வீட்டு வேலைகள் மற்றும் அங்கன்வாடி வேலைகளுக்கு மத்தியில் படிப்பதற்கான நேரம் ஒதுக்கி ஆர்வத்துடன் படித்தேன். அப்போது எனது மகனும் பி.எஸ்.சி. புவியியல் படித்துவிட்டு வீட்டில் இருந்தான். இதனால் அவனையும் படிப்புக்கு கூட்டாளியாக்கிக்கொண்டேன். 2 பேரும் பயிற்சி மையத்தில் சேர்ந்தோம். ஆனால் நான் வேலை பார்த்ததால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி மையத்திற்கு சென்று வந்தேன்.
பயிற்சி
ஆனால், தினமும் வகுப்புகளுக்குச் செல்லும் விவேக், வகுப்பில் படித்ததை வீட்டில் எனக்கு கற்றுக் கொடுப்பான். தேர்வுக்கு 4 மாதங்களுக்கு முன், லீவு போட்டுவிட்டு, நானும் மகனுடன் கோச்சிங் சென்டருக்குச் சென்று படித்து தேர்வு எழுதினேன்.
நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன் என எதிர்பார்த்தேன். தற்போது அது நடந்துள்ளது. மகனுடன் சேர்ந்து ஒன்றாக படித்தது வெற்றியை எளிதாக்கியது. இடைவிடாத முயற்சி அதற்கான பலனை தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கல்வி மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், அரசு வேலை சாத்தியமே என்பதை, இந்த 41 வயது பெண் சாதித்துக் காட்டியுள்ளார்.
மேலும் படிக்க...