ரூபாய் நோட்டுக்கள் கிழிந்திருந்தால், ஒட்டுப்போடப்பட்டிருந்தால் செல்லாது என்பது நமக்கு தெரியும். ஆனால் ரிசர்வ் வங்கி 10 வகையான அளவுகோல்களின் படி ரூபாய் நோட்டுக்களை தகுதியற்றவை என அடையாளம் காண்கிறது. அவை என்னென்ன என்று காண்போம்.
தகுதியற்ற ரூபாய் நோட்டுகள் (Invalid currency notes)
1. அழுக்காக்குதல்: ரூபாய் நோட்டுகள் முழுவதுமோ அல்லது சில இடங்களிலோ அழுக்காவது, கிழிவது போன்றவற்றை இது குறிக்கும். நாள்பட நோட்டின் நிறம் மஞ்சளாவது, அதிகப்படியான மடிப்பு, அழுக்கு மற்றும் தொடர் புழக்கத்தால் ஏற்படும் சேதம் போன்றவற்றால் ரூபாய் நோட்டின் அச்சிடப்படாத பகுதிகள் பிரதிபலிப்பை இழப்பதை வைத்து நோட்டுக்கள் செல்லுமா செல்லாதா என வங்கிகள் முடிவு செய்யும்.
2. தளர்ச்சி: ரூபாய் நோட்டுக்களின் அமைப்பு சேதமடைந்து அதன் காகிதம் தளர்ச்சியுடன் இருந்தால் அவை பயன்படுத்த தகுதியற்றவை
3. முனை மடங்கிய நோட்டுக்கள்: ரூபாய் நோட்டுக்களின் முனைகள் 1 சதுர செமீக்கும் மேல் மடங்கி சேதமடைந்திருந்தால் அவை செல்லாது
4. துளைகள்: ரூபாய் நோட்டுக்களில் 8 சதுர மில்லிமீட்டருக்கு மேல் எங்கு துளைகள் இருந்தாலும் அந்த நோட்டுக்கள் புழக்கத்திற்கு தகுதியற்றவை
5. கிழிவது: இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ரூபாயின் விளிம்புகள் கிழிந்து காணப்பட்டால் அவை செல்லாது.
6. கறைகள்: அழுக்குகள் பரவி காணப்படும் ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தத் தகுதியற்றதாகும்
7. கிறுக்கல்கள்: ரூபாய் நோட்டுக்களில் உள்ள எண்கள், எழுத்துக்களை மாற்றும் வகையில் கிறுக்கி வைத்தால் அந்நோட்டுக்கள் செல்லாது.
8. கசங்கிய/மடிந்த நோட்டுக்கள்: அசல் நோட்டின் நீளம் அல்லது அகலத்தைக் குறைக்கும் வகையில் ஒரு ரூபாய் நோட்டு மடங்கி இருந்தால், கசங்கி இருந்தால் அவை செல்லாதவை என ஒதுக்கப்படும்.
9. நிறமாற்றம்: ரூபாய் நோட்டின் மை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ நிறமாற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவை செல்லாதவையாகும்.
10. ஓட்டுப்போடுதல்: இதுவும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ரூபாய் நோட்டுக்களின் கிழிந்த பகுதியை டேப், காகிதம், பசை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒட்டியிருந்தால் அந்நோட்டுக்கள் செல்லாது.
மேலும் படிக்க
ரேஷன் கடையில் இணைய சேவை: விரைவில் தொடக்கம்!
ஆதார் - பான் எண்ணை இன்றே இணைத்து விடுங்கள்: இரு மடங்காகும் அபராதம்!