Blogs

Tuesday, 21 March 2023 04:05 PM , by: Muthukrishnan Murugan

Awareness by providing free wooden birdhouses to protect sparrows

அழிந்துவரும் பறவைகளின் பட்டியலில் முதன்மையாக உள்ள சிட்டுக்குருவியினை பாதுகாக்க இலவசமாக மரத்தினால் ஆன பறவை கூடுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சரவணன் மற்றும் அவரது விழுதுகள் இயக்கம்.

பள்ளி முடிந்ததும் சீர்காழி ரயில் நிலையம் நோக்கி செல்வது தான் இளம் சரவணனின் விருப்பமான நிகழ்வாக இருந்தது. நீராவி என்ஜின்களை அருகிலிருந்து பார்ப்பதற்காக அவர் தனது வீட்டின் அருகே அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு தினசரி செல்வார். ஸ்டேஷன் அருகே உள்ள டெலிபோன் கேபிள்கள் மற்றும் மரங்களில் மெல்லிசை சத்தம் எழுப்பியவாறு  நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் அமர்ந்திருக்குமாம்.

ஆனால் காலப்போக்கில், ரயில்களில் நீராவி இயந்திரங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. ஃபைபர் கேபிள்கள் பூமிக்கடியில் சென்றன. மேல்நிலை தொலைபேசி கேபிள்கள் தேவையற்றதாகி போனது. பல மரங்கள் வெட்டப்பட்டன. வயர்லெஸ் தகவல்தொடர்பு வளர்ச்சியடைந்ததால், இன்று சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது என வேதனையோடு பேசத் தொடங்கினார் சரவணன்.

2019 ஆம் ஆண்டில் 'விழுதுகள் சிட்டுக்குருவிகள் பாதுகாப்புத் திட்டம்' என்ற தனது முயற்சியின் மூலம்  சிட்டுகுருவிகளைப் பாதுகாப்பதை தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் 45 வயதான சீர்காழியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஷரவணன் கிருஷ்ணமூர்த்தி.

தச்சர்கள் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 900-க்கும் மேற்பட்ட பறவைக்கூடுகளை உருவாக்கி நாடு முழுவதும் விநியோகித்துள்ளனர். பறவைக் கூடுகளானது மரப்பலகையால் ஆனவை மற்றும் நச்சுத்தன்மையற்றவை, மேலும் சுவரில் ஏற்றுவதற்கான ஸ்லாட்களையும் கொண்டுள்ளன. சரவணன் இன்னும் அதிகப்படியான பறவைக் கூடுகளை உருவாக்க விரும்புகிறார், ஆனால் நிதியில்லாமல் இந்த முயற்சியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது கடினமாக உள்ளது என்றார். ஒவ்வொரு பறவைக் கூடத்திற்கும் பொருள் மற்றும் உழைப்பு சேர்த்து சுமார் 350 முதல் 450 ரூபாய் வரை செலவாகும் என்றார். 

இவரது இந்த முயற்சி, சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதில் உதவியது மட்டுமின்றி, பறவைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள் பாதுகாப்புப் பணியைத் தவிர, மரங்கள் நடுதல், இரத்த தானம் செய்தல், கடற்கரையைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பழைய பள்ளிக் கட்டிடங்களைச் சரிசெய்தல் போன்ற பல சமூகப் பணிகளிலும் சரவணன் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் பறவைகளைப் பாதுகாப்பதே தனக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக அவர் கருதுகிறார்.

சரவணன் மேற்கொள்ளும் பணிக்கு அவரது மனைவி உமாமகேஸ்வரியும் தார்மீக ஆதரவு அளித்து இணைந்து பணியாற்றுகிறார். அவரைப் போலவே, அவரது 15 வயது மகன் தரனும் பறவைக் கூடுகளின் மீது ஆர்வம் காட்டுகிறார். 2012 ஆம் ஆண்டு அவர் தொடங்கிய விழுதுகள் இயக்கம் என்ற அமைப்பின் தன்னார்வத் தொண்டர்களும் அவருடைய பணிகளுக்கு உதவுகிறார்கள்.

உலக சிட்டுக்குருவி தினம் சமீபத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் கடுமையான வெப்பத்தில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அலையும் பறவைகளை சோர்விலிருந்து காப்பாற்ற, சில தானியங்களுடன் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை தங்கள் வீட்டின் முன் வைக்குமாறு சரவணன் கேட்டுக்கொண்டார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் நகரமயமாக்கலுக்கு மத்தியில் பறவைகளின் பாதுகாப்பையும் அவர் வலியுறுத்தினார். மரங்களை நடுதல் மற்றும் பறவைக் கூடுகளை நிறுவுதல் போன்ற எளிய வழிமுறைகளின் மூலம் பறவைகளை பாதுகாக்க இயலும் என சரவணன் நம்புகிறார்.

தொழில்நுட்பம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருவதால், பறவைகளின் எண்ணிக்கையை ஆபத்தில் ஆழ்த்தும் அதிக அளவிலான கதிர்வீச்சுடன், 5G மற்றும் அதற்கு அப்பால் ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது நுழைந்து இருக்கிறோம் என்ற சரவணன் தொழில்நுட்பம் அல்லது நகரமயமாதலின் முன்னேற்றத்தை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், பறவைகளைப் பாதுகாப்பதற்கான எளிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் காண்க:

நீங்க ரொம்ப நாளா கேட்டீங்கள.. இந்தாங்க - பட்ஜெட்டில் இடம்பெற்ற பெண்களுக்கான உரிமைத்தொகையின் முழுவிவரம்

5 லட்சம் பரிசு, நம்மாழ்வார் விருது- அங்கக விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)