கரோனாவின் தாக்கம், கோடை வெயில் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீர்சத்து நிறைந்த பழங்களை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.
கரோனாவின் எதிரொலியாக மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த, எல்லாக் காலங்களிலும் கிடைக்க கூடியது என்பதாலும், உடலின் தற்காப்பு சக்தி மற்றும் உயர்ந்த கிருமி நாசினி என்பதாலும் அனைவரும் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வாங்க துவங்கி உள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெயிலை சமாளிக்க, குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய இயற்கை பானமான எலுமிச்சை சாறு முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்தவரை வெப்பம் நிறைந்த மாவட்டம் என்பதால் மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக வருகின்றன.
தூத்துக்குடி சந்தைகளில் எலுமிச்சை அமோகமாக விற்பனையாகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இதே நிலை நீடிப்பதால் தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. குறிப்பாக கரோனா வைரஸ் அச்சத்தால், தேவை அதிகரித்திருப்பதாக எலுமிச்சை வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு சில மாதங்கள் முன்பு வரை சில்லறை விற்பனையில் ஒரு பழம் ரூ.2க்கு விற்பனையான நிலையில் இப்பொழுது ரூ.5 முதல் ரூ.7 என விற்பனையாவதாக தெரிவித்தனர். வரும் மாதங்களில் எலுமிச்சை பழத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.