பிளாஸ்டிக்குக்கு மாற்றாக உள்ள, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தொழில் முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது என, ஐக்கிய நாடு சபை ஆலோசகர் கவுதமன் தெரிவித்தார். இந்தியாவில், 21,450 தென்னை நார் மற்றும் சார்பு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில், 1,250 ஏற்றுமதியாளர்கள் கயிறு வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
கயிறு வாரியத்தின் கீழ், 21 ஷோரூம், இரண்டு ஆய்வு மையங்கள், ஆறு பயிற்சி கூடங்கள் உள்ளன. தென்னை நார் தொழில் மேம்பட மத்திய அரசின் கயிறு வாரியம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க முக்கியத்துவம் கொடுக்கிறது.
அதில், மண் அரிமானம் கட்டுப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குக்கு (Plastic) மாற்றாக உள்ள, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. ரோடு போடும் பணிக்கு இவை பயன்படுத்துவதால் இதனை தயாரிக்க உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஐக்கிய நாடு சபை ஆலோசகர் கவுதமன் கூறியதாவது:
தார்சாலை, நிலச்சரிவு தடுக்க பிளாஸ்டிக் வலை (ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்) பயன்படுத்தப்பட்டது. தற்போது, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தென்னை நார் முதலில், '2 - பிளை' கயிறாக மாற்றப்படுகிறது. தானியங்கி இயந்திரம் வாயிலாக, ஒரு மீட்டர் முதல், நான்கு மீட்டர் அகலம்; 50 மீட்டர் முதல், 100 மீட்டர் நீளம் வரை தேவைக்கேற்ப உற்பத்தி செய்ய முடியும்.
ஒரு நாளைக்கு, 250 சதுரமீட்டர் முதல், 450 சதுர மீட்டர் வரை உற்பத்தி செய்யலாம். 400 ஜி.எஸ்.எம்., (400 கிராம் ஒரு சதுர மீட்டருக்கு), 1,200 ஜி.எஸ்.எம்., வரைக்கும் பல்வேறு வகைகள் உள்ளன.
ஒரு சதுர மீட்டர், 40 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென்னை நாரினால், இயற்கைக்கு எந்த தீங்கும் இல்லை. இதில், 45.84 சதவீதம் லெக்கினின் இருப்பதால், மக்குவதற்கு தாமதமாகும். வலிமை இருப்பதுடன், நெகிழ்ந்து போகும் தன்மை கொண்டதாகும். மண்ணோடு மண்ணாக மக்க, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரையாகும்.
காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (Coir Oven Jio Textiles)
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பிளாஸ்டிக் உபயோகத்துக்கு மாற்றாக, மலைப்பகுதிகளில், நிலச்சரிவு; குளம், குட்டைகள் மண் அரிமானம் தடுக்க, 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' பயன்படுத்த துவங்கியுள்ளனர்.மேலும், சுரங்கங்களில் கனிமங்கள் எடுத்த பின், மறுசீரமைப்பு செய்ய மற்றும் அந்த பகுதியில் மரங்கள், செடிகள் வளர்க்க, 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' பயன்படுத்துகின்றனர்.
வெர்டிக்கல் கார்டனுக்கு உகந்ததாகும். கார், டெக்ஸ்டைல்ஸ், லெதர் போன்ற பெரிய தொழிற்சாலைகளில், வெப்ப சலனத்தை குறைக்க மேற்கூரை மீது இதனை போட்டு, தண்ணீர் தெளித்தால், வெப்ப நிலை சீராக இருக்கும்.
தற்போது, ஊரக ரோடுகள் மேம்படுத்தும் போது, காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு, இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழகத்தில், 'காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்' முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மஞ்சப்பை பரோட்டா: மதுரையில் அறிமுகம்!
போகியில் புகை இல்லை: மக்களுக்கு நன்றி கூறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்!