மக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக உரிய நேரத்துக்குள் தீர்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கு தார்மீக பொறுப்பேற்று தன் சம்பளத்தை தானே, 'கட்' செய்ய உத்தரவிட்டுள்ளார், மத்திய பிரதேச மாநிலத்தின், ஜபல்பூர் கலெக்டர் கரம்வீர் சர்மா. அதிகாரிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றியதன் வாயிலாக, நாடு முழுவதும் உள்ள உயர் அதிகாரிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறார் இந்த 'சூப்பர்மேன்'!
நேர்மையான அதிகாரி (Honest officer)
ஊழல், மோசடி, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அலட்சியம் என, அரசு அதிகாரிகள் குறித்து செய்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற செய்திகளை பார்த்துப் பார்த்து சலித்த மக்களுக்கு, சில நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆறுதலாக இருக்கும்.
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளில் ஒருவர் தான், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரின் கலெக்டராக இருக்கும் கரம்வீர் சர்மா. மத்திய பிரதேசத்தில் 2010ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வான இவர், அங்கு பல துறைகளில் திறம்பட பணிபுரிந்து வருகிறார்.
அதிரடி உத்தரவு (Strict Order)
தற்போது ஜபல்பூர் கலெக்டராக உள்ளார். தலைமை நேர்மையாக இருந்தால், கீழே இருப்பவர்களும் அதுபோல இருக்க முயற்சிப்பர் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிவ் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வர் சிறப்பு பிரிவில் பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, அங்கு காலக்கெடு உள்ளது.
ஜபல்பூர் கலெக்டர் கரம்வீர் சர்மா, இவ்வாறு வரும் புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி அனைத்து துறை அதிகாரிகளுடனும் அவர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பல புகார்கள் மீது, 100 நாட்களைத் தாண்டியும் தீர்வு காணப்படாதது தெரியவந்தது. மேலும், சில அதிகாரிகள் ஆய்வு கூட்டத்திற்குக் கூட வரவில்லை. இதையடுத்து அவர், அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
கூட்டத்துக்கு வராத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். புகார் மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காத பல அதிகாரிகளுக்கு, இந்த மாத சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தார்மீக பொறுப்பு (Moral Responsibility)
தொடர்ந்து மோசமாக செயல்படும் அதிகாரிகளுக்கு, சம்பளத்துடன், ஆண்டு சம்பள உயர்வையும் நிறுத்தி வைக்க பரிந்துரைத்துள்ளார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அதிகாரிகள் சரியாக செயல்படாததற்கு தார்மீக பொறுப்பு ஏற்று, இந்த மாதத்துக்கான தன் சம்பளத்தையும் நிறுத்தி வைக்கும்படி அவர்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
'இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்' என, மாவட்ட கருவூலத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 100 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள அனைத்து புகார்களுக்கும், இம்மாத இறுதிக்குள் தீர்வு காணும்படியும் அதிகாரிகளுக்கு கலெக்டர் கரம்வீர் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.
அரசு அதிகாரிகள் குறித்து எதிர்மறையான செய்திகளையே பார்த்து வெதும்பி வந்த மக்கள், கலெக்டர் கரம்வீர் சர்மாவை, 'சூப்பர்மேன், நிஜ ஹீரோ' என, பாராட்டி வருகின்றனர். 'இது போன்ற அதிகாரிகள் நாடு முழுதும் இருந்தால், நாடு நன்கு முன்னேற்றம் காணும்' என்ற கருத்தையும் சமூக வலைதளங்களில் மக்கள் பகிர்ந்துள்ளனர்.
மேலும் படிக்க