ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது உள்ளூரில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்து வருவதால் அந்தந்த வட்டார விவசாயிகள் முனைப்புடன் காய்கறிகள், பழங்கள், கீரைகள் என குறுகியாக கால சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் தேவையையும், தற்போதுள்ள சந்தை வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்தும் வகையில் பொள்ளாச்சி விவசாயிகள், காய்கறி பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதற்காக தென்னையில் ஊடுபயிராக குறுகியகால காய்கறியை பயிரிட கின்றனர். பொது மக்களும் அருகில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர துவங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாது கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர் என்பதால் விவசாயிகள் தடை உத்தரவு காலத்திலும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஊரடங்கு முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் காய்கறிக்கான தேவை இவ்வாறே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக மிளகாய், வெண்டை, அரசாணி, சேனைக்கிழங்கு, பூசணி என காய்கறிகளை சாகுபடி செய்கின்றனர். மேலும் பொள்ளாச்சி விவசாயிகள் தற்போது இருக்கும் வளங்கள் மற்றும் ஆள் வசதியை பயன்படுத்தி, அதிக அளவில் காய்கறி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது உள்ளூரில் உற்பத்தியாகும் காய்கள் மட்டுமே மக்களின் தேவையை பூர்த்தி செய்வதால் இங்குள்ள காய்கறிகளுக்கான தேவை எப்போதும் போல அதிகரிக்கத்தான் செய்யும். ஊரடங்கு மற்றும் கோடை வறட்சி உள்ளிட்ட காரணங்களினால், பெரும்பாலான இடங்களில் காய்கறி உற்பத்தி சரிந்துள்ளதாக தெரிகிறது. எனவே வரும் காலங்களில் உள்ளூரில் உற்பத்தியாகும் காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.